Published : 08 Aug 2019 04:54 PM
Last Updated : 08 Aug 2019 04:54 PM

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இறுதி 3 பேர் பட்டியலில் மைக் ஹெசன்?- கிங்ஸ் லெவன் பொறுப்பை பாதியில் உதறினார்

ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை மைக் ஹெசன் பாதியிலேயே உதறியுள்ளார்.

காரணம், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கான இறுதிப் பட்டியலின் 3 நபர்களில் மைக் ஹெசன் பெயரும் உள்ளது என்ற செய்திகளை அடுத்து அவர் கிங்ஸ் லெவன் பணியைத் துறந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தான் அணியும் பயிற்சியாளர் பொறுப்புக்கான நபரை தேர்வு செய்ய அழைப்பு விடுத்துள்ள நிலையிலும், வங்கதேச பயிற்சியாளர் போட்டியில் மைக் ஹெசன் பெயர் ஏற்கெனவே அடிபடுவதாலும் அவர் கிங்ஸ் லெவன் பொறுப்பு போதும் என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே நீடிப்பார் என்ற செய்திகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவிசாஸ்திரியை நீக்குவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்று அன்று பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிவந்த நிலையில் முன்னாள் நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் பெயர் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சித் தலைமைப் பொறுப்பு விவகாரத்திலும் அடிபடுகிறது.

மைக் ஹெசன் தலைமையில்தான் 2015 உலகக்கோப்பையில் இறுதிக்கு நியூஸிலாந்து முன்னேறியது, மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்று அந்த அணி டெஸ்ட் தரவரிசையில் 3ம் நிலைக்கு உயர்ந்ததற்கும் மைக் ஹெசன் பயிற்சிதான் காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் அணியுடன் மைக் ஹெசன் செய்து கொண்ட 2 ஆண்டுகால ஒப்பந்தத்தை அவர் பாதியிலேயே உதறியுள்ளார்.

கடந்த அக்டோபரில் ஆஸி. வீரர் பிராட் ஹாட்ஜிடமிருந்த கிங்ஸ் லெவன் தலைமைப் பயிற்சிப் பொறுப்பு மைக் ஹெசனிடம் ஒப்படைக்கப்பட்டது. 44 வயதான மைக் ஹெசன், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய எந்த அணிக்கு தலைமைப் பயிற்சியாளராவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-ஐ.ஏ.என்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x