

2019-2020 சீசனுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடுவண் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து ஷோயப் மாலிக், மொகமது ஹபீஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் எண்ணிக்கையையும் 33-லிருந்து 19 ஆக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளது. அதே போல் வீரர்கள் பிரிவையும் 5லிருந்து மூன்றாகக் குறைத்துள்ளது.
இதன் படி பாபர் ஆஸம், சர்பராஸ் அகமெட், யாசிர் ஷா ஆகிய வீரர்கள் முதனிலை ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முறையே ஏ மற்றும் பி பட்டியலில் இருந்த மாலிக் மற்றும் ஹபீஸ் இம்முறை ஒப்பந்தப்பட்டியலில் இடம்பெறவில்லை
வீரர்கள் எண்ணிக்கையைக் குறைத்து நிதிப்பயன்களை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது பாகிஸ்தான். அதே போல் பிரிவு ஏயிலிருந்த மொகமது ஆமிர், பிரிவு பி யிலிருந்த ஃபகார் ஜமான் ஆகியோர் சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மென் அசார் அலி ஏ பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இமாம் உல் ஹக், ஹாரிஸ் சொஹைல், மொகமது அப்பாஸ் ஆகியோர் சி-பிரிவிலிருந்து பி-பிரிவுக்கு உயர்வு பெற்றனர்.
வெளியேற்றப்பட்ட வீரர்கள்: ஹபீஸ், ஷோயப் மாலிக், ஃபாஹின் அஷ்ரப், ஜுனைத் கான், பிலால் ஆசிப், சாத் அலி, மீர் ஹம்சா, உமைத் ஆசிப், ஷாகிப்ஸாதா பர்ஹான், மொகமது நவாஸ், ருமான் ரயீஸ், ஆசிப் அலி, ஹுசைன் தலத், ரஹத் அலி, உஸ்மான் சலாஹுதீன்.