இப்போது டெஸ்ட் அணியில் தேர்வு செய்வீர்களா இல்லையா? 6 விக்;  99 பந்துகளில் 108 என்று அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்

இப்போது டெஸ்ட் அணியில் தேர்வு செய்வீர்களா இல்லையா? 6 விக்;  99 பந்துகளில் 108 என்று அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்
Updated on
1 min read

லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் 2வது டெஸ்ட்டில் ஆட முடியாமல் போனதால் அவரது இடத்துக்குத் தன்னை தேர்வு செய்யுங்கள் என்று கூறும் விதமாக ஜோப்ரா ஆர்ச்சர் சசெக்ஸ் அணிக்காக 6 விக்கெட்டுகளை சாய்த்ததோடு சதமும் அடித்து அசத்தியுள்ளார்.

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் பிரமாதமான இரு இன்னிங்ஸ் சதம், மேத்யூ வேடின் ஆதிக்க சதம், நேதன் லயன், கமின்ஸின் அற்புதப் பந்து வீச்சு என்று ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் பின் தங்கியிருந்த போதிலும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கை ஸ்திரப்படுத்த இன்னொரு ஆல்ரவுண்டர் தேவைப்படும் நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னை டெஸ்ட் அணியில் தேர்வு செய்வதற்கான நியாயத்தை ஜோப்ரா ஆர்ச்சர் கோரியுள்ளார்.

கிளவுஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் புதிய பந்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆர்ச்சர் பிறகு மேலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தம் 12.1 ஓவர்களையே அவர் வீசினார். மேலும் உடல்தகுதியளவிலும் முழுநிறைவடைந்துள்ளார். நல்ல வேகம் மற்றும் ஆக்ரோஷத்துடன் வீசியதாக ஆங்கிலேய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சசெக்ஸ் அணி 52/4 என்று சரிவு கண்டிருந்த போது 6ம் நிலையில் இறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் 99 பந்துகளில் 108 ரன்களை விளாசி அணியை மீட்டார். 13 ரன்களில் இவருக்கு கேட்ச் விடப்பட்டாலும் இவர் ஜார்ஜ் ட்ரிசல் என்ற ஆஃப் ஸ்பின்னரை வெளுத்துக் கட்டினார். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளையும் மைதானம் நெடுக அடித்து விரட்டினார்.

சதம் அடித்த பிறகு கிளவுஸ்டர்ஷயர் அணியின் அட்ரியன் நீல் என்ற வேகப்பந்து வீச்சாளரின் பவுன்சரில் அடிவாங்கினார். ஆனாலும் பரிசோதனைகளுக்குப் பிறகு தொடர்ந்து ஆடினார்.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆடுவார் என்றே தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in