

எட்ஜ்பாஸ்டனில் கடினமான பிட்சில் கடினமான சூழலில் கடும் அழுத்தங்களில் ஆடிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை புரிந்தது ஆஸ்திரேலிய வெற்றிக்கு வித்திட்டது.
இதன் மூலம் அவர் ஐசிசி தரவரிசையில் மீண்டும் 3ம் இடத்துக்குத் தாவியுள்ளார், அந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த புஜாராவை 4ம் இடத்துக்குத் தள்ளினார் ஸ்மித்.
இதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அவர் 900 புள்ளிகள் பட்டியலில் இணைந்து முதலிட விராட் கோலி, இரண்டாம் இட கேன் வில்லியம்சனை அச்சுறுத்த பின் தொடர்ந்து வருகிறார்.
முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் 857 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தற்போது 922 புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் இருந்தாலும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் இதே பார்மில் ஆடினார் இவரது முதலிடம் ஆட்டம் காண்பது உறுதி. கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் இருக்கிறார், நிச்சயம் இவரை ஸ்மித் முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாட் கமின்ஸ் 898 புள்ளிகளுடன் தன் டெஸ்ட் பவுலிங் முதலிடத்தை உறுதி செய்தார். கிளென் மெக்ரா, ஷேன் வார்னுக்கு அடுத்ததாக இந்தப் புள்ளிகள் அளவை எட்டியவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பாட் கமின்ஸ்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டூவர் பிராட் 16ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர்களில் கிறிஸ் வோக்ஸ் மொயின் அலியை பின்னுக்குத் தள்ளி 9ம் இடத்தில் உள்ளார்.