Published : 04 Aug 2019 07:00 PM
Last Updated : 04 Aug 2019 07:00 PM

இர்பான் பதான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற உத்தரவு 

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல், பாதுகாப்பு அதிகரிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து மாநில கிரிக்கெட் அணியின்  பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான இர்பான் பதான் உள்ளிட்ட பல வீரர்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 16 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து அமர்நாத் சென்ற பக்தர்கள் உடனடியாக மலையில் இருந்து கீழே இறங்க அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் பயின்றுவரும் அனைத்து மாணவர்களையும் அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரத்தில் இருந்து ஏறக்குறைய 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், ஸ்ரீநகரில் மாநிலத்தின் 16 வயது மற்றும் 19 வயதுக்குட் பட்ட அணியின் வீரர்களுக்கான பயிற்சி முகாம் பயிற்சியாளர் இர்பான் பதான் தலைமையில் நடந்து வந்தது. இந்தப் பயிற்சியை உடனடியாக முடித்துவிட்டு வீரர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இர்பான் பதான் நிருபர்களிடம் கூறுகையில், " ஜூனியர் அணியின் பயிற்சியை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஜூன் முதல் ஜூலை மாதம் வரை முதல்கட்டப் பயிற்சி முடிந்துவிட்டது. 2-வது கட்டப் பயிற்சி தொடங்க இருந்தது. மாநில அரசின் அறிவுரையைத் தொடர்ந்து புறப்படுகிறோம். 

ஜம்மு கிரிக்கெட் மாநில கிரிக்கெட்  அமைப்பினருடன் இது தொடர்பாக நான் பேசினேன், அவர்களின் ஒப்புதலின் பேரில் வீரர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம். பெரும்பாலான மாணவர்கள் ஜம்மு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 

அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்குச் சென்று சேர்வார்கள் என்று நம்புகிறோம். காஷ்மீரில் நிலவும் சூழலைப் பார்த்து வீரர்களின் பெற்றோர்கள் எந்த அளவுக்குப் பதற்றமாக இருப்பார்கள் என்பதை அறிவோம். நானும் இன்று இரவு புறப்பட்டுவிடுவேன். விரைவில் சூழல் இயல்பு நிலைக்கு வந்த பின் மீண்டும் பயிற்சி தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x