'பந்துவீசும் முன்பே 2 விக்கெட்டை சாய்த்த சைனி': சேட்டன் சவுகான், பிஷன்சிங் பேடியை வறுத்தெடுத்த கம்பீர் 

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் : கோப்புப்படம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் : கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி,

பந்துவீசும் முன்பே இரு விக்கெட்டை வீழ்த்திய பந்துவீச்சாளரை பார்த்ததுண்டா, சைனி பந்துவீச வரும் முன்பே சேட்டன் சவுகான், பிஷன்சிங் பேடி விக்கெட்டைச் சாய்த்துள்ளார் என்று பாஜக எம்.பி.யும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் நவ்தீப் சைனி அறிமுகமாகி இருந்தார். முதல் போட்டியிலே அசத்தலாகப் பந்துவீசிய சைனி, 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றிலையே கடைசி ஓவரை மெய்டனாக வீசிய 2-வது பந்துவீச்சாளர் எனும் பெருமையை சைனி பெற்றார்.


ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சைனியின் திறமையைப் பார்த்த கவுதம் கம்பீர் நீண்டநாட்களாகவே இந்திய அணிக்குள் சேர்க்க  வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் டெல்லி ரஞ்சி அணியிலும் நவ்தீப் சைனியை சேர்க்குமாறு வலியுறுத்தினார். 

இந்திய அணியில் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசக்கூடிய ஒரே வலதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால், சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் குரல் கொடுத்தார். ஆனால், ரஞ்சி அணி தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் வீரர்கள் பிஷன்சிங் பேடி, சேட்டன் சவுகான் ஆகியோர் சைனியை டெல்லி ரஞ்சி அணியில் எடுக்கத் தொடர்ந்து மறுத்தனர். 

சைனியை குறித்து கம்பீர் பேசும்போது, வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரரை டெல்லி ரஞ்சி அணியில் சேர்ப்பது தவறு என்று அவருக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்ற முதல் ஆட்டத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சைனி தனது திறமையை நிரூபித்துவிட்டதால், பிஷன்சிங் பேடி, சவுகானை ட்விட்டரில் கம்பீர் காய்ச்சி எடுத்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறுகையில், " இந்திய அணியில் நம்முடைய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்று பந்துவீசும் முன்பே சைனி இரு விக்கெட்டுகளை சாய்த்துவிட்டுத்தான் பந்துவீசினார். யாரென்று கேட்கிறீர்களா பிஷன்சிங் பேடி, சேட்டன் சவுகான் ஆகியோர்தான். சைனியின் கிரிக்கெட்டுக்கு இரங்கல் தெரிவித்த அவர்கள் இருவரின் மிடில் ஸ்டெம்ப் , சைனியின் அறிமுகத்தால் போல்டாகி காணாமல் போனது. வெட்கக்கேடு" எனத் தெரிவி்த்துள்ளார்.

இந்தியா ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசிய சைனி, 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் இடம் பெற்ற சைனி, அதிகபட்சமாக 152 கி.மீ. வேகக்தில் பந்துவீசினார். 13 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in