

லாடர்ஹால்,
மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல் முதல் இரு ஆட்டங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இன்று இரவு நடைபெற இருக்கும் இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில், மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல் முதல் இரு ஆட்டங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் பிரமாதப்படுத்திய ஆன்ட்ரூ ரஸல் உலகக்கோப்பைக்கான மேற்கி்ந்தியத்தீவுகள் அணியில் இடம் பெற்றார். ஆனால், முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த ரஸல், காயம் தீவிரமானதைத் தொடர்ந்து போட்டித் தொடரின் பாதியிலேயே விலகினார்.
இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் ஆன்ட்ரூ ரஸல் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்ட்ரூ ரஸல் உடல் தகுதி அறியாமலே அந்த அணி நிர்வாகம் இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டித்தொடரில் அவரின் பெயரை சேர்த்திருந்தது.
இதற்கிடையே முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று குணமைடைந்த ரஸல் கனடாவில் நடந்துவரும் ஜி-20 போட்டியில் விளையாடினார்.
அப்போது, அந்த போட்டியில் ரஸல் பந்துவீசும் போது மீ்ண்டும் முழங்காலில் வலி ஏற்பட்டதால் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் விளையாட முடியாத நிலையையும் தெரிவித்தார்.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆன்ட்ரூ ரஸல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜாஸன் முகமது சேர்க்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கி்ந்தியத்தீவுகள் அணியில் இடம் பெற்றிருந்த ஜாஸன் முகமது, ஒரு ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளர் பிளாய்ட் ரீபர் கூறுகையில், " புளோரிடாவில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் இரு போட்டிகளுக்கு விளையாடும் முகமதுவை வரவேற்கிறோம். மூன்று வகையான ஆட்டங்களிலும் விளையாடிய அனுபவம் முகமதுவுக்கு இருக்கிறது.
அதேசமயம் ரஸல் போன்ற வீரர்களின் இடத்தை நிரப்புவதும் எளிதான காரியம் இல்லை. டி-20 போட்டிகளில் பல்வேறு ஆட்டங்களில் மே.இ.தீவுகள் அணி வெல்வதற்கு ரஸல் காரணமாகி இருக்கிறார். ஜேஸன் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம் " எனத் தெரிவித்தார்.