Published : 03 Aug 2019 01:02 PM
Last Updated : 03 Aug 2019 01:02 PM

'உலகக்கோப்பை தோல்விக்குப்பின் விடிந்த ஒவ்வொரு காலையும் மோசமாகவே இருந்தது': மனம் திறந்த கோலி

 

லாடர்ஹில்

உலகக் கோப்பைப் போட்டி தோல்விக்குப்பின் விடிந்த ஒவ்வொரு காலைப்பொழுதும் எங்களுக்கு மோசமாகவே இருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் லீக் ஆட்டங்களில்சிறப்பாகச் செயல்பட்டு முதலிடம் பிடித்த இந்திய அணி, அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப்பின் மீண்டும் தனது கிரிக்கெட் பயணத்தை இன்று முதல் தொடர்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதலாவது டி20 போட்டி இன்று  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், லாடர்ஹில் நகரில்  நடக்கிறது. 

இந்த  போட்டிக்கு முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்த தொடர் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ரிஷப் பந்த் தன்னுடைய அனைத்து திறமைகளையும், கட்டற்ற வகையில், வெளிப்படுத்த இது சரியான வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன். 

ரிஷப்பந்துக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், அவர் களத்தில் நிலைத்து நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.தோனியின் அனுபவம் அணிக்கு எப்போதும் மிகப்பெரிய காரணியாக இருக்கும், ஆனால், இந்த நேரத்தில், இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர இது சரியான வாய்ப்பாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே போன்ற வளரும் வீரர்கள் இந்த தொடரில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு, இந்திய ஒருநாள் அணியின் நடுவரிசைக்கு தங்களை பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

உலகக்கோப்பை தோல்வியைப் பற்றி கூற வேண்டுமானால், நாங்கள் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறிது நினைத்துப் பார்க்கவே கடினமாக இருந்தது. அந்த தோல்விக்குப்பின் ஒவ்வொரு நாள் காலையும் விடியும்போது எங்களுக்கு மிகமோசமானதாக இருந்தது.

அன்றைய நாள் முழுவதும் வாழ்க்கை குறித்தும், கிரிக்கெட் குறித்தும் யோசிக்க வேண்டியது இருக்கும். ஏனென்றால் நாங்கள் தொழில் ரீதியாக கிரிக்கெட் விளையாடுபவர்கள். ஒவ்வொரு அணியும் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்பதால், பல சிந்தனைகள் ஓடியது.

உலகக் கோப்பையில் நடந்த விஷயங்களில் இருந்து மீண்டும் இப்போது நன்றாக இருக்கிறோம், பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டோம், அது சிறப்பாகவே இருந்தது. மீண்டும் பீல்டிங் செய்யவும், கிரிக்கெட் விளையாடவும் ஒவ்வொருவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம். அணிக்கு செய்ய வேண்டிய சிறந்த விஷயம் என்னவென்றால், தோல்வி மனப்பான்மையில் இருந்து விரைவாக வெளியேற வேண்டியதுதான். 

நாங்கள் இன்னும் ஆடுகளத்தைப் பார்க்கவில்லை. ஆடுகளம் மூடிவைக்கப்பட்டுள்ளது. நாளை நாங்கள் விளையாடும்போதுதான் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும். கடந்தமுறை இந்த ஆடுகளத்தில் விளையாடியபோது, நன்றாக இருந்தது.

அதிகமான ரன் அடிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. போட்டியும் சுவாரஸ்யமாக, அதிக விளையாட்டுத்தனம் நிறைந்ததாக இருந்தது. இந்த முறையும் எந்தவித்தியாசமும் இருக்கப் போவதில்லை. 
இவ்வாறு விராட்கோலி தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x