Published : 14 Jul 2015 09:55 AM
Last Updated : 14 Jul 2015 09:55 AM

இன்று கடைசி ஒருநாள் போட்டி: ‘ஒயிட் வாஷ்’ முனைப்பில் இந்தியா

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரு போட்டி களையும் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, இன்று நடைபெறும் 3-வது போட்டி யையும் வென்று ஜிம்பாப்வே அணியை ‘ஒயிட் வாஷ்’ ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆனால் சொந்த மண்ணில் விளை யாடும் ஜிம்பாப்வே அணியோ ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

அம்பட்டி ராயுடு விலகல்

இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்த ரஹானே-விஜய் ஜோடி இந்த ஆட்டத்திலும் நல்ல தொடக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் சதமும், 2-வது போட்டியில் 41 ரன்களும் சேர்த்த அம்பட்டி ராயுடுவுக்கு வலது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக சஞ்ஜு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உரிய நேரத்துக்குள் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவை வந்தடையமாட்டார் என்பதால் இன்றைய ஆட்டத்தில் மணீஷ் பாண்டே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் உத்தப்பா, திவாரி, கேதார் ஜாதவ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், அக் ஷர் படேல் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியில் சிபாபா, சிபாண்டா, மஸகட்ஸா, கேப்டன் சிகும்பரா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் சிகும்பரா, சிபாபாவைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காதது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இந்திய பேட்ஸ் மேன்களை ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தினாலும், அவர்களால் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

போட்டி நேரம்: பகல் 12.30

நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட், தூர்தர்ஷன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x