Last Updated : 03 Aug, 2019 12:22 PM

 

Published : 03 Aug 2019 12:22 PM
Last Updated : 03 Aug 2019 12:22 PM

ஆஷஸ் அறிமுக போட்டியிலேயே சதம், 7 மணிநேரம் களத்ததில் நங்கூரமிட்ட ரோரி பர்ன்ஸ் அசத்தல்: ஆஸி.யை திணறவிட்ட இங்கிலாந்து

எட்ஜ்பாஸ்டன்

ஆஷஸ் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த ரோரி பர்ன்ஸின் அபரமான ஆட்டத்தால், ஆஷஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் 284 ரன்களை எட்டுவதற்கு இன்னும் இங்கிலாந்து அணிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இங்கிலாந்து ஆடி வருகிறது. 

ஆஷஸ் போட்டியில் அறிமுகமாகிய முதல் ஆட்டத்திலேயே இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸ் அற்புதமான சதம் அடித்து அணியை வலுவாகக் கட்டமைத்தார். தொடக்க வீரராகக் களமிறங்கி 125 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். 

2-வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்துள்ளது. பர்ன்ஸ் 125 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 38 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிஸ்ஸில் 85 ரன்னில் இங்கிலாந்து அணி சுருண்டது. அதில்இடம் பெற்றருந்த ரோரி பர்ன்ஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஷஸ் தொடரில் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று எண்ணிய நிலையில் சசெஸ்க்ஸ் அணி வீரர் பர்னஸ் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஜோ ரூட்டுடன் பாட்னர்ஷிப் அமைத்து 132 ரன்களும், ஸ்டோக்ஸுடன் பாட்னர்ஷிப் அமைத்து 73 ரன்கள் சேர்த்துள்ளார் ரோரி பர்ன்ஸ். 

ரோரி பர்ன்ஸ்க்கு இது 7-வது டெஸ்ட் போட்டிதான் என்றாலும், ஆஷஸ் தொடரில் முதல்முறையாக அறிமுகமாகினார். இதற்குமுன் மே.இ.தீவுகள், இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்களில் ரோரி பர்ன்ஸ் கடினமான ஆடுகளங்களில் ஆடிய அனுபவம் அவருக்கு நேற்று கைகொடுத்தது. 

ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில், பட்டின்ஸன், கம்மின்ஸ் ஆகியோரின் மின்னல் வேக பந்துவீச்சு, பவுன்ஸர் ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை சரிந்து கொண்டிருந்ததால், அழுத்தம் அதிகரித்தது. அதைதாங்கி பர்ன்ஸ் சதம் அடித்தது பாராட்டுக்குரியது. 

ரோரி பர்ன்ஸ் 22 ரன்கள் இருந்தபோது, நாதன் லயன் பந்துவீச்சில் கால்காப்பில் பந்தைவாங்கினார். இதற்கு ஆஸ்திரேலிய அணியினர் டிஆர்எஸ் முறைக்கு சென்றால் நிச்சயம் பர்ன்ஸ் வெளியேறி இருந்திருப்பார். ஆனால் டிஆர்எஸ் முறைக்கு செல்லவில்லை, அதேபோல 75 ரன்கள் சேர்த்திருந்தபோது உஸ்மான் கவாஜா டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்ய முயன்றார், அதிலிருந்தும் பர்ன்ஸ் தப்பித்தார். இந்த இரு கட்டங்களையும் தாண்டி பர்ன்ஸ் சதம் அடித்துள்ளார். 

முன்னதாக முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் சேர்த்திருந்தது. ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும், ராய் 6 ரன்னிலும் களத்தில் இருந்து நேற்றை ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆஸ்திரேலியாவின் பட்டின்ஸன், கம்மின்ஸ், பீட்டர் சிடில் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சுக்கு தொடக்கத்திலேயே நல்ல பலன் கிடைத்தது. 22  ரன்னில் இங்கிலாந்து அணி ராய்(10) விக்கெட்டை பட்டின்ஸன் பந்துவீச்சில் இழந்தது. 

ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பட்டின்ஸன் முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்துவந்த ரூட்,  பர்ன்ஸுடன் சேர்ந்து நிதானமாக ஆடினார். ரூட் படுமந்தமாக ஆடினார், 12 ரன் சேர்த்திருந்தபோது, கால்காப்பில் வாங்கி அவுட் வழங்கிய நிலையில், டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்து தப்பித்தார். அதன்பின் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடிய ரூட் 70 பந்துகளைச் சந்தித்தபின்புதான் முதல்பவுண்டரியை அடித்தார். 

நங்கூரமிட்ட இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீ்ச்சாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். நாதன் லயனும், ஹெட் ஆகியோரும் பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.  இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர்.  

இருவரையும் மதிய உணவு இடைவேளக்குப்பின் தேநீர் இடைவேளைவரை பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து அணி 154 ரன்கள் சேர்த்திருந்த போது, ரூட் 57 ரன்னில் சிடில் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ஜோ டென்லியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. டென்லி 18 ரன்னில் பட்டின்ஸன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லரும் 5 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் பான்கிராப்டிடம் மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

154 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டோக்ஸ், பர்ன்ஸுடன் இணைந்தார். 

பர்ன்ஸ் 90 ரன்கள் சேர்த்திருந்தபோது அவரை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய அணியின் வழக்கம் போலான தந்திரங்களையும், நெருக்கடிகளையும் அளித்தார்கள். ஆனால், நிதானமாக ஆடிய பர்ன்ஸ் 224 பந்துகளில் தனது முதலாவது சதத்தை அடித்தார். ஆஷஸ் தொடரில் அறிமுகமாகியவுடனே தனது முதலாவது சதம் அடித்த பெருமையை பர்ன்ஸ் பெற்றார். 

இதற்கு முன் பர்ன்ஸின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 84 ரன்கள் இருந்த நிலையில், இப்போது முதல் முறையாக சதம் அடித்துள்ளார். 

தொடர்ந்து ஆடிய பர்ன்ஸ், ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பர்னஸ் 125 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 38 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

ஆஸ்திரேலியத் தரப்பில் பட்டின்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போத்திராஜ்
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x