Published : 03 Aug 2019 10:09 AM
Last Updated : 03 Aug 2019 10:09 AM

புளோரிடா மாகாணத்தில் இன்று இந்தியா - மே.இ.தீவுகள் டி 20ல் மோதல்

லாடர்ஹில் 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லாடர்ஹில் நகரில் அமைந்துள்ள சென்ட்ரல் புரோவர்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யத்தவறிய (அரை இறுதியுடன் வெளி
யேற்றம்) இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பையை நோக்கி பயணிக்கும் வகையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரில் களமிறங்குகிறது.

குறுகிய வடிவிலான தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் இந்தத் தொடர்களில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ஓரங்கட்டப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே ஆகியோருக்கு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளதால் ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே ஆகியோர் வரவிருக்கும் 6 ஆட்டங்களிலும் ( 3 டி 20, 3 ஒருநாள் போட்டி) உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவருமே மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற தொடரில் சிறந்த திறனை வெளிப்
படுத்திய நிலையில்தான் சீனியர்அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ளனர். இதனால் கிடைக்கும் வாய்ப்பை இவர்கள் சரியாக பயன்
படுத்துக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். எனினும் அணிச் சேர்க்கையை கருத்தில் கொண்டு விளையாடும் லெவனில் இவர்
களில் யாராவது ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் மீதும் சற்று எதிர்பார்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வேகப் பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெறக்கூடும்.

உலகக் கோப்பை தொடரின் போது காயம் அடைந்த ஷிகர் தவண் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க ஆயத்தமாக உள்ளார். இதனால்பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தை கே.எல்.ராகுல் ஆக்கிர
மிக்கக்கூடும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 110 ரன்கள் விளாசியிருந்தார்.

இதேபோன்ற வகையிலான உயர்மட்ட செயல்திறனை மீண்டும் வெளிப்படுத்த கே.எல்.ராகுல் இம்முறை முயற்சிக்கக்கூடும். விராட் கோலியுடன் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ள நிலையில் உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசி அசத்திய ரோஹித் சர்மா, அந்த திறனை இந்தத் தொடருக்கும் வியாபிக்கச் செய்யக்கூடும்.

இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கூடுதல் பொறுப்புகளை தோளில் சுமக்க உள்ளார். ஏனெனில் சீனியர் வீரரான மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருக்கு சிறிய தெளிவு கிடைத்துள்ளதால் ரிஷப் பந்த்தை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கும் அணியின் நம்பர் 1 விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த்தை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

டி 20-ல் நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் 9-வது இடத்தை பிடித்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. வலுவான ஹிட்டர்கள், ஆல்ரவுண்டர்கள் படையை கொண்ட அந்த அணியால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. டி 20 வடிவில் எப்போதும் அசுர பலத்துடன் காணப்படும் அந்த அணி இம்முறையும் இந்திய அணிக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

கெய்ரன் பொலார்டு, சுனில் நரேன் ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது பலத்தை அதிகரித்துள்ளது. அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கனடாவில் நடைபெற்று வரும் தொழில்முறை டி 20 போட்டியில் கலந்து கொண்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டி 20 ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. ஆந்த்ரே ரஸ்ஸல் அணியில் உள்ள போதிலும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவ
தால் விளையாடும் லெவனில் இடம்பெறுவாரா? என்பது சந்தேகம்தான்.

அணிகள் விவரம்

மேற்கிந்தியத் தீவுகள்: கார்லோஸ் பிராத் வெயிட், ஜான் கேம்பல், கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், சிம்ரன் ஹெட்மையர், கெய்ரன் பொலார்டு, ஆந்த்ரே ரஸ்ஸல், நிக்கோலஸ் பூரன், ரோவ்மான் பொவல், சுனில் நரேன், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், ஒஷன் தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஹாரி பியரே.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் ஷைனி.

2-வது முறை

லாடர்ஹில் மைதானத்தில் இந்தியா - மே.இ.தீவுகள் 2-வது முறையாக டி 20-ல் மோதுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி இந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 246 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய  அணி ஒரு ரன்னில் தோல்வியடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 46 பந்துகளில் சதம் விளாசியிருந்தார்.

கெயில் சாதனையை முறியடிப்பாரா?

இந்திய அணியின் தொடக்க வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா இதுவரை டி 20-ல் 94 ஆட்டங்களில் விளையாடி 102 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த வகையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில்  58 ஆட்டங்களில் 105 சிக்ஸர்களை பறக்கவிட்டு முதலிடத்தில் உள்ளார்.

கெயிலின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 4 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதை தற்போதைய தொடரில் ரோஹித் சர்மா விளாசும் பட்சத்தில் கெயில் சாதனையை முறிடியத்து புதிய சாதனையை நிகழ்த்துவார்.

புதிய பயிற்சியாளர் நியமனத்தில் கருத்து மோதல்கள், தோனி ராணுவ பணிக்காக கிரிக்கெட்டை தவிர்த்தது, விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் என ஊகங்கள், டெஸ்ட் - குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் வேண்டுமென்று மேலோங்கும் விவாதங்கள் ஆகியவற்றுக்கு இடையேதான் இந்திய அணி இன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் களமிறங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x