

கொல்கத்தா:
இப்போதைக்கு இல்லாவிட்டாலும் தானும் ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராவதற்கான லட்சியங்களை வளர்த்துக் கொள்வேன் என்று சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
“நிச்சயமாக, பயிற்சியாளராக எனக்கும் ஆர்வமுள்ளது, ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் இல்லை. இன்னும் ஒரு கட்டம் போகட்டும் அப்போது பயிற்சியாளர் களத்தில் என் பெயரையும் இறக்குவேன்.
இப்போதைக்கு நான் பல விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன். ஐபிஎல், சிஏபி, டிவி வர்ணனை, இவற்ற்றை முதலில் நிறைவு செய்கிறேன். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்தியப் பயி்ற்சியாளராவேன். அதாவது என்னை தேர்வு செய்தால், ஆனால் நிச்சயமாக எனக்கு ஆர்வம் உள்ளடு, இப்போது அல்ல, எதிர்காலத்தில்.
தலைமைப்பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இல்லை. மகேலா ஜெயவர்தனே விண்ணப்பிப்பார் என்று பார்த்தேன் ஆனால் அவர் விண்ணப்பிக்கவில்லை. பெரிய பெயர்கள் எதுவும் இல்லை. எனவே குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். அது பற்றி நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. பயிற்சியாளரைத் தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன்.
மே.இ.தீவுகள் தொடரைப் பற்றி கூற வேண்டுமெனில் அங்கு அந்த அணி வலுவாகவே இருக்கும். டி20 அங்கு முன்னுரிமையான வடிவம். அவர்களும் டி20யை மகிழ்ச்சியுடன் ஆடுகின்றனர். அவர்கள்தான் நடப்பு உலக டி20 சாம்பியன்கள், புளோரிடாவில் இந்திய அணிக்கு 2 போட்டிகள் கடும் சவாலாகவே இருக்கும்.
டெஸ்ட் போட்டிகளும் கடினமாகவே இருக்கும், ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் பிரமாதமாக ஆடி தொடரை வென்றனர். இந்திய அணியை அவர்கள் நிச்சயம் சவாலுக்குட்படுத்துவார்கள்” என்கிறார் கங்குலி.
-ஐ.ஏ.என்.எஸ்.