Published : 02 Aug 2019 03:30 PM
Last Updated : 02 Aug 2019 03:30 PM

ஒரு கட்டத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை இழந்தேன்.. இப்போது என்னிடம் வார்த்தைகள் இல்லை: ஸ்டீவ் ஸ்மித் உணர்ச்சிகரம்

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் 122/8 என்று படுமோசமாக சரிந்திருக்க வேண்டிய அணியை பீட்டர் சிடில் (44), நேதன் லயன் (12) ஆகிய கடைவரிசை வீரர்களை வைத்துக் கொண்டு ஸ்மித் ஸ்கோரை 284 ரன்களுக்குக் கொண்டு சென்றார். இது ஒருவேளை வெற்றி ஸ்கோராகவும் இருக்க வாய்ப்புள்ளது. 

ஸ்டீவ் ஸ்மித் 219 பந்துகளில் 16 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் பந்து வீச்சுக்குச் சாதகமான நிலையில் இங்கிலாந்தின் அற்புதமான பந்து வீச்சிற்கு எதிராக ஸ்மித் 144 ரன்களை எடுத்து பிராடின் 5வது விக்கெட்டாக பவுல்டு ஆகும் போது ஆஸ்திரேலிய ஓய்வறையில் அனைவரது முகத்திலும் நிம்மதி தெரிந்தது. 

ஒவ்வொரு பந்துக்கும் பின் காலில் சென்று ஆடும் உத்திக்கு எதிராக இங்கிலாந்தினால் ஒன்றும் செய்ய முடியவில்லை... ஸ்மித் தானாகவே அவுட் ஆனால்தான் உண்டு என்றே பல தொடர்களில் தெரிந்தது. குறிப்பாக கடந்த ஆஷஸ் தொடர் முதல் இங்கிலாந்து அவரை வீழ்த்த முடியவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் ஸ்மித் தன் சதம் பற்றி உணர்ச்சிகரமாக தெரிவித்ததாவது:

கடந்த 15 மாதங்களாக சில நேரங்களில் நான் கிரிக்கெட்டை தொடர்வேனா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும் இழந்தேன். அதுவும் குறிப்பாக முழங்கை அறுவை சிகிச்சையின் போது இந்தச் சிந்தனை அதிகம் இருந்தது. ஆனால் மிகவும் விசித்திரமாக முழங்கை காயம் சரியானவுடன் என்னிடம் மீண்டும் கிரிக்கெட் ஆர்வம் தொற்றியது. 

நான் விளையாட வேண்டும், ஆஸ்திரேலியாவுக்காக ஆட வேண்டும், நான் எனக்குப் பிடித்ததைச் செய்வதன் மூலம் ரசிகர்களைப் பெருமைப் படுத்த வேண்டும் என்று மீண்டும் தோன்ற ஆரம்பித்தது. 

கிரிக்கெட் மீதான ஆர்வமும் நேயமும் எனக்கு எந்த நாளிலும் குறைந்தது இல்லை, அதனால்தான் எனக்கு எப்படி நடுவில் ஆர்வம் குறைந்தது என்று தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக எனக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. 

எனக்கு இந்தச் சதம் பற்றி பேச வார்த்தைகள் வரவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சதம். அணியை சிக்கலிலிருந்து மீட்டது எனக்குப் பெருமையாக இருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சு அபாரம். முதல் 2 செஷன்களில் நன்றாக வீசினர். கடினமான காலக்கட்டத்தைக் கடந்து வந்து அணியை மீட்டு ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டியது பெருமையளிக்கிறது. 

இது என்னுடைய மிகச்சிறந்த சதங்களில் ஒன்று எனக் கருதுகிறேன். நிச்சயமாக, ஏனெனில் ஆஷஸ் முதல் டெஸ்ட், முதல் நாள் பிட்ச், அணி போராடிக்கொண்டிருந்தது. நான் பல பந்துகள் பீட்டன் ஆனேன், ஆனால் மனதிலிருந்து அதை அகற்றிவிட்டு அடுத்த பந்துக்கு தயாரானேன். என் விக்கெட்டை எளிதில் விட்டுக் கொடுக்க நான் விரும்பவில்லை.  பீட்டர்சிடில், நேதன் லயன் அற்புதம். 

இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x