Published : 02 Aug 2019 02:35 PM
Last Updated : 02 Aug 2019 02:35 PM

தோனியை 7-வது இடத்தில் களமிறக்கியது 'என்னுடைய முடிவு அல்ல': மவுனம் கலைத்தார் சஞ்சய் பங்கர்

புதுடெல்லி,

உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் தோனியை 7-வது வீரராக களமிறக்கியது "என்னுடைய சொந்த முடிவு அல்ல" என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. 240 ரன்கள் சேர்த்தால் வெற்றியுடன் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேறினார்கள். 

ரவிந்திர ஜடேஜா(77), தோனி(50) ஆகியோர் 7-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். ஆனால், கடைசி நேரத்தில் தோனியின் ரன் அவுட் ஆட்டத்தின் திருப்புமுனையாகி இந்திய அணி 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் தோல்விக்குப்பின் தோனியை 7-வது வீரராக களமிறக்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சூழலைப் பார்த்து தோனியை 4-வது இடத்தில் களமிறக்கி இருந்தால், அனுபவ வீரர் தோனி விக்கெட் சரிவைத் தடுத்திருப்பார், அணியும் வென்றிருக்கும். 

ஆனால் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு அடுத்தார்போல் தோனி களமிறங்கியது அன்றைய போட்டியைப் பார்த்த அனைவருக்கும் வியப்பாக இருந்தது. ஏற்கனவே தோனி பேட்டிங் ஃபார்மில்லாமல் தடுமாறிய நிலையில் அவரை கடைசி நேரத்தில் களமிறக்கி சூழலை கெடுக்கிறார்களே என்று ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர். 

தோனி 7-வது இடத்தில் களமிறங்கியதற்கு பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் எடுத்த முடிவுதான் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதன் பின் விளக்கம் அளித்த அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி 7-வது இடத்தில் களமிறங்கியது அணியில் கலந்தாய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவித்தார். 

இருப்பினும் சஞ்சய் பங்கர்தான் இந்த முடிவை எடுக்கத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டு ஆழமாக வைக்கப்பட்டு இருந்தது. இதனால், தற்போது நடைபெறும் பயிற்சியாளர் தேர்வில், சஞ்சய் பங்கர் மாற்றப்படுவதற்கான அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. 

2014-ம் ஆண்டு அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பங்கர் 50 டெஸ்ட் போட்டிகளிலும் 119 ஒருநாள் போட்டிகளிலும் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். 

இந்த சூழலில் தோனி 7-வது இடத்தில் களமிறங்கியது தன்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல என்று சஞ்சய் பங்கர் மனம் திறந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: 

இந்திய அணி தோல்வி அடைந்தற்கும், தோனியை 7-வது இடத்தில் களமிறக்கியதற்கும் நான்தான் காரணம், என்னுடைய சொந்த விருப்பத்தில் முடிவு  என்ற ரீதியில் மக்கள் என்னைப் பார்ப்பதும், வேதனையாக இருக்கிறது. 

உண்மையில் அந்த முடிவு நான் தனித்து எடுக்கவில்லை, அந்த முடிவு எடுக்கும் அதிகாரமும் எனக்கு இல்லை. நம்புங்கள், இதுபோன்ற ஏராளமான சூழலை நாங்கள் கணித்திருக்கிறோம். 

நடுவரிசை தேவைக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதாவது 5-ம் இடம், 6-வது இடம், 7-வது வரிசை எளிதாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு எடுத்திருந்தோம். ஏனென்றால், 40 ஓவர்கள் வரை விக்கெட்டுகள் நிலைக்க வேண்டும். இதை தனி்ப்பட்ட வீரர்கள் நாங்கள் எடுத்த முடிவை நன்கு அறிவார்கள். 

அரையிறுதி போட்டிக்கு முன்பாக, ஆப்கானிஸ்தான் போட்டிக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய  கேப்டன் கோலி, தோனியை கீழ்வரிசையில் களமிறக்க முடிவு செய்தோம் எனத் தெரிவித்தார். 

 வழக்கமாக 5-வது இடத்தில் களமிறங்கிய தோனியை அரையிறுதியில் 7-வது இடத்தில் களமிறக்கினோம். 35 ஓவர்களுக்கு பின் தோனி இருந்தால், டெத்  ஓவர்களில் அதிகமான ரன்கள் அடிப்பார், கடைசிவரிசையில் களமிறங்கும் வீரர்களை கட்டுக்கோப்பாக வழிநடத்தி நல்ல ஸ்கோர் செய்யவைப்பார் என்பதால் தோனி அரையிறுதியில் தோனியின் இடம் மாற்றப்பட்டது. 

ஓய்வறையில் நீண்ட ஆலோசனைக்குப்பின்பு தான் தினேஷ் கார்த்திக் 5-வது இடத்தில் களமிறக்கப்பட்டார். அதன்பின் அனுபவ வீரர் தோனி வர வேண்டும், பினிஷர் பணியை சிறப்பாகச் செய்வார் என்பதால், தோனிக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. 

ஆக தோனி 7-வது வரிசையில் களமிறங்கியது அணியில் ஆலோசனைக்குப்பின் எடுக்கப்பட்ட முடிவு என்ற நிலையில், ஏன் நான் எடுத்த முடிவு என்று கூறப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை. 

தோனியின் அனுபவம் கடைசி நேரத்தில் தேவையாக இருந்தது, அனைத்து ஆட்டங்களிலும் சிறந்த பினிஷராக இருந்து ஆட்டத்தை தோனி முடித்துக்கொடுத்துள்ளார்.

தோனியை 7வது இடத்தில் இறக்கியது குற்றமாக இப்போது பார்க்கப்படுகிறது. உண்மை நிலவரம் அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும்.


இவ்வாறு பங்கர் தெரிவி்த்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x