Published : 01 Aug 2019 09:15 PM
Last Updated : 01 Aug 2019 09:15 PM

அணிக்காக மட்டுமல்ல.. நாட்டுக்காக.. : கோலியுடன் வேறுபாடு விவகாரத்தில் ரோஹித் சூசகம்

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் அணிக்குள் ரோஹித் சர்மா கோஷ்டி, கோலி கோஷ்டி என்று இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறது என்று செய்திகள் வெளியான நிலையில் விராட் கோலி இதனை ‘குப்பை’ என்று மறுத்தார்.

மே.இ.தீவுகளுக்கு புறப்படும் முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி, இப்படிப்பட்ட விஷயங்களை நான் நீண்டகாலமாகப் பார்த்து வருகிறேன், சொந்த வாழ்க்கையை இழுத்து செய்தியாக்குவது போன்றவை நடந்து வருகின்றன. இது மரியாதைக் கெட்டத்தனமாகும். எனக்கும் ரோஹித்துக்கும் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை, மேலும் அணிக்குள் பிளவு இருந்தால் நம்பர் 1 நிலைக்கு அணி உயர்ந்திருக்கத்தான் முடியுமா?

மொத்தத்தில் பொய்களை பரப்பி கற்பனைக்கதைகளை உருவாக்கி இதனை உண்மை என்று நம்ப வைக்க முயற்சி செய்யப்படுகிறது” என்று சற்று காட்டமாகவே தெரிவித்தார் கோலி. 

ஆனால் ரோஹித் சர்மா திடீரென தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டதைப் பார்க்கும் போது இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லையோ என்ற ஐயங்களைக் கிளப்புவதாக உள்ளது. 

ரோஹித் தன் ட்வீட்டில், “நான் என் அணிக்காக மட்டும் களம் காண்பதில்லை, நாட்டுக்காக களம் காண்கிறேன்” என்ற தொனியில் ட்வீட் செய்துள்ளார். இது எதற்காக இந்தத் தருணத்தில் செய்யப்பட்ட ட்வீட் என்று புரியவில்லை, ஆனால் இப்படிப்பட்ட ட்வீட்கள் அவர்கள் கூறும் பொய்களை உண்மையாக்கி விடாதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ரவிசாஸ்திரியை தொடர்ந்து பயிற்சியாளராகத் தக்க வைத்து அதன் மூலம் ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித்தை கேப்டனாக்குவதன் மூலம் கோலியை சமாதானப்படுத்த முயற்சிகள் நடக்கலாம் என்று கிரிக்கெட் விவகார விவரதாரிகள் கருதுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x