

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தன் டென்னிஸ் வாழ்க்கையில் தான் நினைத்ததைச் சாதித்துள்ளதாகவும் ஆகவே 2வது இன்னிங்சில் தனக்கு நிரூபிக்க எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்த பிறகு மார்கரெட் கோர்ட், இவோன் கூலகாங், கிம் கிளைஸ்டர்ஸ் ஆகியோர்தான் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இப்போது சானியா மிர்சா தன் குழந்தைப் பிறப்புக்குப் பிறகு டென்னிஸ் 2வது இன்னிங்ஸுக்குத் தயாராகி வருகிறார்.
இதற்காக தினசரி 4 மணி நேரம் பயிற்சி எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்சா 2020 முதல் ஆடவிருக்கிறார். தினசரி 4 மணி நேரம் பயிற்சி செய்து வரும் சானியா சுமார் 26 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.
சானியா மிர்ஸா இது வரை 6 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் இரட்டையர் பிரிவில் பிடித்துள்ளார். மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பல சாதனைகளை இரட்டையர் பிரிவில் அவர் நிகழ்த்தியது மறக்க முடியாத டென்னிஸ் ஆட்டங்களாகும்.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் கனவு கண்ட அனைத்தையும் டென்னிஸில் அடைந்து விட்டேன். அடுத்து நிகழ்வதெல்லாம், கிடைப்பதெல்லாம் போனஸ்தான். ஆகஸ்டில் மீண்டும் சர்வதேச டென்னிஸுக்கு வருவேன் அல்லது ஜனவரியில் வருவேன். என் மகன் இஷான் எங்களுக்கு கிடைத்த ஆசிர்வதிக்கப்பட்ட செல்வம். மீண்டும் வந்து நன்றாக ஆட முடிந்தால் அது ஒரு வரப்பிரசாதம்தான். யாருக்கும் எதையும் நிரூபிக்க மீண்டும் வரவில்லை, எனக்கு சவால்கள் பிடிக்கும். டென்னிஸ் பிடிக்கும்.
என் உடல் எப்படி பயிற்சிக்கு வினையாற்றுகிறது, சர்வதேச டென்னிஸிற்கு எப்படி அதனைத் தயார் படுத்துவது என்ற நிலையில் இருப்பதால் ஆகஸ்டோ அல்லது ஜனவரியோ என்று தெரிவித்தேன். ஏனெனில் நான் முழுதும் உடல் ரீதியாக தயாராகாத நிலையில் நான் அந்த மட்டத்தில் ஆட முடியாது. மீண்டும் வந்து காயமடைந்து திரும்புவதில் யாதொரு பயனும் இல்லை” என்றார்.
செரினா வில்லியம்ஸ் குழந்தைப் பெற்ற பிறகும் டென்னிஸ் ஆக்ரோஷம் குறையாமல் ஆடி வருகிறார். விக்டோரியா அஸரெங்க்காவும் இப்படியே.
இது பற்றி சானியா கூறும்போது, “மீண்டும் வருவதற்கான போதுமான உத்வேகம் இருக்கிறது. குழந்தை பெற்ற பிறகு செரினா கிராண்ட் ஸ்லாம்களில் ஆடிவருவது எனக்கும் ஊக்கமளிக்கிறது.
தினமும் 3-4 மணி நேரம் டென்னிஸ் உடன் உடற்தகுதிப் பயிற்சி செய்து வருகிறேன். முதலில் உடல் எடையைக் குறைப்பதுதான் நோக்கம், அதன் பிறகு கடும் பயிற்சிக்கு மீண்டும் வந்துள்ளேன். குழந்தைப் பேறு காலத்தில் 23 கிலோ உடல் எடை கூடியது, ஆனால் தற்போது 26 கிலோ எடை குறைத்துள்ளேன். சர்வதேச மட்டத்தில் ஆட வலுவாக வேண்டும். எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை.
ஒரு முறை மீண்டும் விளையாட வந்து விட்டால் ஒரு வீராங்கனையாக நான் எங்கு இருக்கிறேன் என்பது தெரியும், இப்போதைக்கு மீண்டும் வர வேண்டும் என்பதே இலக்கு. எதிர்பார்ப்புகள் வழக்கம் போல் அதிகமாகவே இருக்கும், ஆனால் நான் கடந்த 2 ஆண்டுகள் டென்னிஸ் ஆடவேயில்லை. ஆகவே நான் மீண்டும் ஆடவந்தால் அது டோக்கியோ ஒலிம்பிக்ஸை நோக்கியதாக இருக்கும்” என்றார் சானியா மிர்சா.
-பிடிஐ.