Published : 01 Aug 2019 08:26 AM
Last Updated : 01 Aug 2019 08:26 AM

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்; எட்ஜ்பஸ்டனில் இங்கிலாந்தை சமாளிக்குமா ஆஸ்திரேலியா?

பர்மிங்காம்

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த கையுடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரை அணுகுகிறது இங்கிலாந்து அணி. 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரானது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாகவும் உள்ளதால் வழக்கமானதைவிட இம்முறை எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. 

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 4 நாட்
கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சற்று தேக்கம் அடைந்தது. இதில் இருந்து மீண்டெழுவதில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். டாப்-ஆர்டர் சரிவால் ஜோ ரூட் பேட்டிங் வரிசையில் மீண்டும் 3-வது வீரராக களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது. 

இது நிகழும் பட்சத்தில் ஜோ டென்லி 4-வது வரிசையில் விளையாடக்கூடும். இதற்கிடையே உலகக் கோப்பை தொடரில் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜோப்ரா ஆர்ச்சர் உடற்தகுதி பிரச்சினையால் இன்றைய ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து டெஸ்ட் சாம்பி
யன்ஷிப் தொடரை வெற்றிகரமாக தொடங்குவதில் கவனம் செலுத்தக்கூடும். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் தடைக்குப் பிறகு முதன்முறையாக டெஸ்ட் வடிவில் களமிறங்க உள்ளனர். 

 இவர்களில் வார்னர், ஸ்மித் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெறுவது உறுதியான ஒன்று. அதேவேளையில் கேமரூன் பான்கிராப்ட் தொடக்க பேட்டிங் வரிசையில் மார்கஸ் ஹாரிஸுடன் மல்லுக்கட்டக்கூடும். 

ஆஸ்திரேலிய அணி கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி வாகை சூடியது இல்லை. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கூடுதல் தையல்கள் கொண்ட டியூக்ஸ் பந்துகளில் கடுமையாக திணறி வருவதும் இதற்கு முக்கிய காரணம். 

இது ஒருபுறம் இருக்க கடந்த2001-ம் ஆண்டுக்கு பிறகு பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்தது இல்லை. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிஆட்டத்தில் இதே மைதானத்தில்தான் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்திடம் தோல்வி கண்டிருந்தது. 
அதேவேளையில் எட்ஜ்பஸ்டனில் இங்கிலாந்து அணிகடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

அணிகள் விவரம்

இங்கிலாந்து லெவன் : ஜோ ரூட் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ டென்லி, ரோர்ரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு. 
 ஆஸ்திரேலியா: டிம் பெயின் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, கேமரூன் பான்கிராப்ட், ஸ்டீவ் ஸ்மித், டிரெவிஸ் ஹெட், மேத்யூ வேட், மார்னஸ் லபுஷான், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஹாரிஸ், மைக்கேல் நேசர், நேதன் லயன், பாட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட்.

இடம்: பர்மிங்காம் நேரம்: பிற்பகல் 3
நேரலை: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x