

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருப்பதால், கஜானா காலியான நாடு ஐசிசி அளிக்கும் கிரிக்கெட் நிதியை ஜிம்பாப்வே அரசு பயன்படுத்தலாம் என்ற அச்சத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு தடை விதித்தது.
இதற்கு உலகம் முழுதும் எதிர்ப்பு கிளம்பியது, இந்திய வீரர் அஸ்வினே ஜிம்பாப்வே வீரர்களுக்காக தன் வேதனையை வெளியிட்டார். சிகந்தர் ரசா என்ற ஜிம்பாப்வே வீரர் நாங்கள் ‘வேறு வேலை ஏதாவது தேடிக்கொள்ள வேண்டியதுதானா?’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் இருண்ட காலத்தில் சிக்கியிருப்பதால் அதன் வீரர்கள் பலர் கடும் வேதனையடைந்துள்ளனர். தாங்கள் கிரிக்கெட்டை பணத்துக்காக ஆடவில்லை ஆட்டத்தின் மீதான பற்றுதலினாலேயே ஆடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
வீரர் ஒருவர் தன் பெயரைக் குறிப்பிடாமல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திடம் பேசும்போது, “இலவசமாக ஆடக்கூடத் தயாராக இருக்கிறோம், அதாவது குகையின் முடிவில் சிறு வெளிச்சம் தெரிந்தால் போதும்” என்று ஆடி முடித்த பிறகு பிற்பாடு எங்களுக்குச் சம்பளம் கொடுக்கட்டும் என்ற முடிவுக்கும் வந்து விட்டதாகத் தெரிவித்தார்.
எங்களது அடுத்த தொடர் டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றாகும். இதில் நாங்கள் இலவசமாக விளையாடத் தயாராக இருக்கிறோம், அதாவது பிற்பாடு சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளித்தால் என்று கூறியுள்ளார்.
அதாவது கிரிக்கெட்டை விட்டு நாங்களும் எங்களை விட்டு கிரிக்கெட்டும் போய் விடக்கூடாது, ஜிம்பாப்வே கிரிக்கெட்டை உயிருடன் வைத்திருக்க இந்த முடிவைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள்.
ஆனால் மகளிர் டி 20 தகுதிச் சுற்று, ஆடவர் டி20 தகுதிச் சுற்றுகளி ஜிம்பாப்வே ஆடுவது கடினம், ஏறக்குறைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.