Published : 31 Jul 2019 03:11 PM
Last Updated : 31 Jul 2019 03:11 PM

ஓவர்த்ரோ பவுண்டரியை ரத்து செய்யக்கோரி நான் நடுவரிடம் கேட்டேனா?: பென் ஸ்டோக்ஸ் அதிர்ச்சி

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் : படம் உதவி ஐசிசி

லண்டன்,

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஓவர்த்ரோ மூலம் பவுண்டரி சென்றதை ரத்து செய்யக்கோரி, நடுவரிடம் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானதை அவர் மறுத்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் இங்கிலாந்துக்கு 
தேவைப்பட்டது. 

டிரன்ட் போல்ட் பந்துவீச களத்தில் ஸ்டோக்ஸ், ரஷித் இருந்தனர். ஸ்டோக்ஸ் தான் சந்தித்த 2 பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தில் ஸ்டோக்ஸ் மிட்விக்கெட்டில் காலை மடக்கிக்கொண்டு அபாரமான சிக்ஸரை அடித்தார். 

4வது பந்தில்ஸ்டோக்ஸ்  2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்துவிக்கெட் கீப்பருக்கு எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டைகாப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்துஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தது.

இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஓவர் த்ரோ மூலம் கிடைத்த பவுண்டரியை நடுவரிடம் சென்று பென் ஸ்டோக்ஸ் ரத்து செய்யுமாறு கூறியதாகவும், அதற்கு நடுவர்களாக இருந்த தர்மசேனா, மரைஸ் இராஸ்மஸ் ஆகியோர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பிபிசி வானொலியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்,பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பென் ஸ்டோக்ஸிடம் ஓவர் த்ரோ மூலம் கிடைத்த பவுண்டரியை ஏன் ரத்து செய்ய நடுவரிடம் கேட்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்வியைக் கேட்டதும் பென் ஸ்டோக்ஸ் அதிர்ச்சி அடைந்தார். அவர் பேசுகையில், " என்ன நான் நடுவரிடம் சென்று ஓவர் த்ரோ பவுண்டரியை ரத்து செய்யக் கோரினேனா. நான் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தநேரத்தில்  என்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன், நான் எப்படி நடுவரிடம் பேசி இருக்க முடியும். 

பேட்டில் பந்துபட்டு பவுண்டரி சென்றவுடன், நான் எனது மார்பில் கை வைத்து மன்னிப்பு கோரினேன். நடுவரிடம் சென்று பேசவில்லை. அந்த சமயத்தில் நான் நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம், கேப்டன் வில்லியம்ஸிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் என்றுதான் கூறினேன். நடுவரிடம் சென்று பவுண்டரியை ரத்து செய்ய நான் கூறவில்லை" எனத் தெரிவித்தார்.

முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், " உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் முடிந்தபின் நான் மைக்கேல் வானிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் சென்று தங்களுக்கு ஓவர் த்ரோ மூலம் கிடைத்த அந்த 4 ரன்கள் தேவையில்லை, திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார் " என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x