இந்தியப் பெண்ணை மணக்கிறார் பாக். கிரிக்கெட் வீரர் ஹசன் அலி

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி : கோப்புப்படம்
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி : கோப்புப்படம்
Updated on
1 min read

லாகூர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஹரியாணாவைச் சேர்ந்த பெண்ணை விரைவில் மணம் முடிக்க உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இத்தகவலை மறுக்காத ஹசன் அலி, விரைவில் திருமணம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாமியா அர்ஜூ. இங்கிலாந்தில் பொறியியல் படித்தவரான ஷாமியா தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது அவரின் குடும்பத்தினர் டெல்லியிலும், சிலர் ஹரியாணாவிலும் வசித்து வருகின்றனர். ஷாமியாவின் பெற்றோர் துபாயில் வசிக்கின்றனர். 

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி குடும்பத்தினரும், ஷாமியா அர்ஜு குடும்பத்தினரும் துபாயில் சந்தித்துப் பேசிவிட்டநிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதி துபாயில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தானில் வெளியாகும் ஜியோ சேனல் தெரிவிக்கிறது. ஆனால் இதுகுறித்த விரிவான, அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை 

இதுகுறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியிடம் நிருபர்கள் கேட்டபோது, " என்னுடைய திருமணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், இப்போது எதையும் உறுதியாக கூறமாட்டேன். இரு குடும்பத்தினரும் இன்னும் முறைப்படி சந்திக்கவில்லை. விரைவில் உங்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

துபாயில் தனது நண்பர் ஒருவரால் ஷமியா, ஹசன் அலிக்கு அறிமுகமாகியுள்ளார். அதன்பின் இருவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்து காதலாகி, தற்போது திருமணம் வரை வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே ஹைதராபாத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை, பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in