Published : 30 Jul 2019 04:02 PM
Last Updated : 30 Jul 2019 04:02 PM

ரவிசாஸ்திரி குறித்து கருத்து கேட்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்னும் என்னை அணுகவில்லை: விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர்கள் தேர்வு விண்ணப்ப இறுதி நாள் செவ்வாயான இன்றோடு முடிவடைகிறது, இந்நிலையில் மே.இ.தீவுகளுக்குப் புறப்பட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பது பற்றி தன்னிடம் இன்னும் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

பொதுவாக விளிம்புநிலை வீரர்களை, லாபி, பின்புலம் இல்லாத வீரர்களை அணியிலிருந்து தூக்குவதும் மீண்டும் அழைப்பதும் மீண்டும் தூக்குவதுமாகச் செய்து வரும் விராட் கோலி சில விஷயங்களில் மட்டும் மாற்றம் தேவையில்லை என்று நினைக்கும் சுயபாதுகாப்புணர்வு கொண்ட ஒரு வீரர் மற்றும் கேப்டனாகவே இருந்து வருகிறார். 

அணியில் அடுத்த கேப்டன் வாய்ப்பு உள்ளவர்கள் என்று தெரியும் வீரர்கள் ஓரங்கட்டப்படுவதாக அவர் மீது சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். ரஹானேயை ஒருநாள் போட்டியில் ஓரங்கட்டியதும், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் அய்யர் போன்றோருக்கு (இந்தியா ஏ கேப்டன்) வாய்ப்புகளை கொடுக்காமல் உட்கார வைத்ததும் கோலி மீதான விமர்சனங்களை பரவலாக்கியுள்ளது. ஒருநாள் அணியில் கோலி, தோனி, ரவிசாஸ்திரி ஆகியோர்தான் மொத்த அணியையே தேர்வு செய்கின்றனர் என்ற விமர்சனங்களும் எழுந்தன. 

இந்நிலையில் ரவிசாஸ்திரியே தலைமைப் பயிற்சியாளராக தொடர்ந்தால் நல்லது என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது:

ரவி சாஸ்திரியுடன் எங்கள் அனைவருக்கும் நல்ல இணக்கமான நட்புறவு உள்ளது. அனைவருக்கும் அவருக்குமிடையே பரஸ்பர மரியாதை உள்ளது. ஒரு குழுவாக நாங்கள் நன்றாகத்தான் இதுவரை திறமையை வெளிப்படுத்தி வருகிறோம். 

ஆகவே அவரே தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளராக நீடித்தால் நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் இதனை கிரிக்கெட் ஆலோசனைக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் கிரிக்கெட் ஆலோசனைக் குழு என்னிடம் இது பற்றி கருத்துக் கேட்பது அவர்களது விருப்பமே. இதுவரை என்னை அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. இந்த நடைமுறையில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. 

அவர்கள் பயிற்சியாளர் குறித்து என் கருத்தைக் கேட்டால் நிச்சயம் அவர்களிடம் என் கருத்தைத் தெரிவிப்பேன். 

இவ்வாறு தெரிவித்தார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x