

பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் இளம் கிரிகெட் வீரர் இமாம் உல் ஹக் காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண்கள் 8 பேர் சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், இமாம் உல் ஹக்கும் மவுனம் காத்து வந்தனர்.
இந்த நிலையில் இமாம் இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரி உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வாசிம் கான் கூறும்போது, “ நாங்கள் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இமாம்மிடம் பேசினோம். நடந்த எல்லாவற்றுக்கும் இமாம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாங்கள் இது தொடர்பான பிரச்சினையை தீர்க்கும்ப்படி அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இது தனிப்பட்ட விஷயமாக இருப்பினும் எங்களுடைய வீரர்கள் ஒழுக்கத்தில் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
எதிர்காலத்தில் இம்மாதிரியான நிகழ்வுகள் இனி நடக்காது என்று நம்புகிறோம்” என்றார்.