Published : 29 Jul 2019 03:30 PM
Last Updated : 29 Jul 2019 03:30 PM

9 அணிகள் 71 டெஸ்ட் போட்டிகள், 2 ஆண்டுகள், 2021 ஜூனில் இறுதிப் போட்டி: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பி அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்த ஐசிசி

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன, மொத்தம் 9 அணிகள் 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்டிகள் 2 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடைபெறும், இதில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் இறுதிப் போட்டியில் 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் மோதும். இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி இன்று (திங்கள், ஜூலை 29) அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தது. 

ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு தொடர்களில் மொத்தம் 71 டெஸ்ட் போட்டிகள் 2 ஆண்டுகளில் நடைபெறுகிறது. 

போட்டிகளை நடத்தும் அந்தந்த நாடுகளின் வாரியங்களே இந்த போட்டிகளை ஏற்பாடு செய்யும். போட்டி நிர்வாகிகள், நடுவர்கள் ஆகியோர்களை மட்டுமே ஐசிசி தீர்மானிக்கும், அதே போல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைகளின் கீழ் நடைபெறுவதை ஐசிசி உறுதி செய்யும். 

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி மார்ச் 31, 2021 வரை நடைபெறும். 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 2021ல் தொடங்கி ஏப்ரல் 30, 2023 வரை நடைபெறும். 

சாம்பியன்ஷிப்பின் லீக் வடிவம்:

பங்கு பெறும் 9 அணிகளும் 3 உள்நாட்டுத் தொடர்களிலும் 3 அயல்நாட்டு தொடர்களிலும் தாங்கள் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி ஆடும், ஒவ்வொரு தொடரும் 2 டெஸ்ட் போட்டிகள் முதல் அதிகபட்சம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இருக்கலாம்.  இது 5 நாட்கள் கிரிக்கெட், பகலிரவு ஆட்டங்களும் உண்டு, ஆனால் இது பரஸ்பரம் உடன்படிக்கையில் இருந்தால் மட்டுமே. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக ஆடும் 9 அணிகள் நீங்கலாக அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் ஆடும் டெஸ்ட் போட்டிகள் இந்த சாம்பியன்ஷிப் கணக்கில் வராது. 

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள்:

இலங்கை-நியூஸி. (2019), இந்தியா - மே.இ.தீவுகள் (2019), பாக். - இலங்கை (2019), இந்தியா-பங்களாதேஷ் (2019), ஆஸ்திரேலியா-பாக் (2019), பாக்.-வங்கதேசம் (2020), இந்தியா-நியூஸிலாந்து (2020), இலங்கை-இங்கிலாந்து (2020), பங்களாதேஷ்-ஆஸி. (2020), மே.இ.தீவுகள்-ஆஸி. (2020), வெஸ்ட் இண்டீஸ் - தெ.ஆ (2020), பங்களாதேஷ்-நியூசி. (2020), நியூசிலாந்து-மே.இ.தீவுகள் (2020), நியூஸி.-பாக் (2020), தெ.ஆ.-இலங்கை (2021), பாக்-தெ.ஆ. (2021), மற்றும் மே.இ.தீவுகள்-இலங்கை (2021). 

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள்:

இந்தியா-தெ.ஆ (2019), ஆஸி.-நியூஸி (2019-20), இங்கி-மே.இ.தீவுகள் (2020), இலங்கை-வ.தேசம் (2020), இங்கி. - பாக் (2020), வ.தே-மே.இ.தீவுகள் (2021), மற்றும் தெ.ஆ-ஆஸி. (2021)

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள்:

தெ.ஆ.- இங்கிலாந்து (2019-20), ஆஸி.-இந்தியா (2020-21).

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள்:

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா (2019), இந்தியா - இங்கிலாந்து (2021)

புள்ளிகள் முறை:

ஒவ்வொரு அணியும் 6 தொடர்களில் பங்கேற்கும். ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் அதாவது அந்தந்தத் தொடர்களில் விளையாடப்படும் போட்டி எண்ணிக்கைகளைப் பொறுத்து. உதாரணமாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு 60 புள்ளிகள். 3 டெஸ்ட் தொடராக இருந்தால் ஒரு டெஸ்ட்டுக்கு 40 புள்ளிகள்.  போட்டி டை ஆனால், அளிக்கப்பட்டுள்ள புள்ளிகளில் 50% கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும். ட்ராவுக்கு 3:1 என்ற அடிப்படையில் புள்ளிகள் பகிரப்படும். 

அதாவது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றிக்கு 60 புள்ளிகள், டையிற்கு 30 புள்ளிகள் ட்ராவுக்கு 20 புள்ளிகள் தோல்விக்கு புள்ளிகள் இல்லை. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றிக்கு 40 புள்ளிகள் டையிற்கு 20 புள்ளிகள் ட்ராவுக்கு 13 புள்ளிகள். 4 டெஸ்ட் கொண்ட தொடரில் வெற்றிக்கு 30 புள்ளிகள், டையிற்கு 15 புள்ளிகள், ட்ராவுக்கு 10 புள்ளிகள். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றிக்கு 24 புள்ளிகள் டையிற்கு 12 புள்ளிகள், ட்ராவுக்கு 8 புள்ளிகள். 

இந்தப் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் போட்டிகளை நடத்தும் வாரியத்தின் உரிமைக்குட்பட்டது, இறுதிப் போட்டி மட்டும் ஐசிசி உரிமைக்குட்பட்டது.

-டீம் ஸ்போர்ட்ஸ்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x