Published : 24 Jul 2015 04:40 PM
Last Updated : 24 Jul 2015 04:40 PM

சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்க பேட்டிங்கே என்னை நல்ல பவுலராக்கியது: டேமியன் பிளெமிங்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங், நேர்காணல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுவது என்றால் என்ன என்பதன் அனுபவத்தை விளக்கிப் பேசியுள்ளார்.

ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நீண்ட பேட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது பற்றி கூறும்போது,

“நான் ஒரு ஸ்விங் பவுலராகவே 1996-ம் ஆண்டு போராடினேன். 1998-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம், அப்போது எங்களிடையே சச்சின்டெண்டுல்கர் பற்றிய விவாதம் பெரிய அளவில் நிகழ்ந்தது. அந்தக் காலக்கட்டத்திலெல்லாம் சச்சினுக்கு பந்து வீசுவது என்பது சாதாரணமான சவால் அல்ல. அதாவது அவருக்கு எப்படி வீசுவது என்பதைக் கற்றுக் கொண்டு அணியில் நீடிக்க வெண்டும் இல்லையெனில் அணியிலிருந்து நீக்கப்படுவோம் அல்லது மீண்டும் அணிக்குத் திரும்ப முடியாமல் கூட போய்விடும்.

ஆஸ்திரேலிய கோச்சிங் மேனுவல் கூறுவதெல்லாம், இந்திய பேட்ஸ்மென்களுக்கு அவர்கள் பிட்சில் ஃபுல் லெந்த்தில் ஆஃப் ஸ்டம்பில் வீச வேண்டும் என்பதையே. அவர்கள் மிட் ஆன் அல்லது மிட் ஆஃப், மற்றும் நேராக ஆடுவார்கள். இப்படி ஆடும் போது எட்ஜ் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்று எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.

ஆனால் அசாருதீன், லஷ்மண் ஆகியோரிடம் இந்த பாச்சா பலிக்காது, அவர்கள் இதே பந்தை மிட்விக்கெட்டில் விளாசுவார்கள். சரி. இன்னும் கொஞ்சம் ஆஃப் ஸ்டம்புக்கு தள்ளி வைடாக வீசினால் அசார், லஷ்மண் ஸ்கொயர் லெக் திசையில் அடிப்பார்கள். சரி மேலும் வைடாக வீசிப் பார்க்கலாம் என்றால் பாயிண்ட் திசையில் அடிப்பார்கள். நேரான மட்டையைக் கொண்டு அசாரையும், லஷ்மணையும் ஆட வைப்பது எப்படி? இது ஒரு சவாலே.

சச்சின் டெண்டுல்கர் என்னை நல்ல பவுலராகவும், நல்ல வீரராகவும் மாற்றினார், ஏனெனில் நான் அவருக்கு எதிராக நிறைய வீசியுள்ளேன். டெல்லியில் 1998-ம் ஆண்டு அவரை பவுன்சரில் வீழ்த்தினேன். அது ஒரு நல்ல பந்து. நான் அவரை முன்னால் வரவைத்தேன். ஓவரின் முதல் பந்தையே அப்படி வீச முடிவெடுத்தேன். அது அவருக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அது நல்ல பவுன்சராக அமைந்ததோடு, கில்கிறிஸ்ட் நம்ப முடியாத கேட்சை பிடித்தார்.

பிறகு ஷார்ஜாவில் 60 ரன்கள் பக்கம் சச்சின் எடுத்திருந்த போது பவுன்ஸரில் மீண்டும் அவரை வீழ்த்தினேன். இது கொஞ்சம் அதிகம் எழும்பியது. உடனே நான் அவருக்கு பவுன்சர்கள் வீசத் தொடங்கினேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் என்ன செய்தார் தெரியுமா? முன்னால் வருவதற்குப் பதிலாக அத்தகைய பந்துகளுக்குப் பின்னால் சென்று ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு மைல்கள் தூரத்துக்கு அடித்து விரட்டத் தொடங்கினார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனை வீழ்த்த முடியும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு, ஆனால் சச்சின் என்ன செய்தார், அவரது ஆட்டத்திட்டத்தை மாற்றி வெளுத்துக் கட்டத் தொடங்கினார், எனக்கு அழுத்தம் அதிகரித்தது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாராவுக்கு எதிராக எப்படி நீடிப்பது என்பதை நான் கற்றுத் தேர்ந்தேன். லாராவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில்தான் ஆடினேன், ஆனால் அவருக்கு பவுன்சர் எனது தெரிவாக இல்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்குக்கும் வீசி கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகவே இவர்களுக்கு எதிராக கரியரை தொடர வேண்டுமென்றால் தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஷார்ஜாவில் மண்புயல் வீசிய போது சச்சின் ஆடிய மறக்க முடியாத சத இன்னிங்ஸ் பற்றி...

ஷார்ஜாவுக்கு முன்பாக கொச்சியில் ஆடிய போது சச்சின் சோபிக்கவில்லை, நாங்கள் இது பற்றி ஜோக் கூட அடித்துள்ளோம், அதாவது லிட்டில் மாஸ்டருக்குக் கூட மோசமான தினம் அமையும் என்றோம். ஆனால் அன்றைய தினம் சச்சின் பவுலிங்கில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இந்தியா வென்றது. சச்சின் ஒரு சூப்பர்-ஹியூமன் (மகா மனிதன்).

ஷார்ஜாவைப் பொறுத்த வரையில் அதற்கு முன்பாக நாங்களும் இந்திய அணியும் 7 அல்லது 8 முறை சந்தித்திருந்தோம். அதனால் இந்திய பேட்ஸ்மென்களைச் சரியாகவே புரிந்து வைத்திருந்தோம். சவுரவ் கங்குலி, நவ்ஜோத் சித்து, அஜய் ஜடேஜா-இவர் ஒரு உதவிகரமான ஒருநாள் வீரர். பிறகு அசார். நாங்கள் இவர்களைக் கட்டுப்படுத்தினோம், ஆனால் சச்சின் 130, 140 என்று அடித்துக் கொண்டிருந்தார். இது உண்மையில் அசாத்தியமானது. அனைவரையும் வீழ்த்தினால் சச்சினும் வீழ்ந்து விடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அவுட் ஆகவில்லை. அப்படிப்பட்ட ஒரு போட்டியில் சச்சினை கட்டுப்படுத்திவிட்டதாக நினைத்தோம் அன்றுதான் ஷார்ஜாவில் திடீரென மண்புயல் தாக்கியது. புயல் ஓய்ந்தவுடன் இறங்கினார், ‘நான் அவர்களிடமிருந்து போட்டியைப் பறிக்கப் போகிறேன்’ என்று ஆடினார். நான் அவர் விக்கெட்டை அசம்பாவிதமாக வீழ்த்தினேன்.

அந்த ஷார்ஜா இறுதிப் போட்டி என் நினைவில் நன்றாக உள்ளது. ஏனெனில் சச்சினுக்கும், எனக்கும் அன்றைய தினம் பிறந்த தினம். நான் ஹேப்பி பர்த்டே என்றேன். அந்தப் போட்டியில் அவர் சதம் எடுத்தார், நாங்கள் தோற்றோம். அந்த ரசிகர்கள் “ஹேப்பி பர்த் டே பிளெமிங்’ என்று அட்டை காண்பித்தனர்.

ஒருநாள் இறுதிப் போட்டியை இழந்ததோடு 25,000 ரசிகர்கள் கேலியுடன் ஹேப்பி பர்த்டே கூறியதை என்னால் மறக்க முடியாது. சச்சின் அந்தக் காலக்கட்டத்தைப் பற்றி பேசியுள்ளாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் கருதுகிறேன், அவர் தனது ஆட்டத்தின் உச்சத்தில் இருந்தார் என்று, அவருடைய பேட்டிங் காலக்கட்டம் மிக நீளமான உச்சம் என்றே நான் கருதுகிறேன்”

இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறினார் டேமியன் பிளெமிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x