Last Updated : 23 Jul, 2015 05:47 PM

 

Published : 23 Jul 2015 05:47 PM
Last Updated : 23 Jul 2015 05:47 PM

தோனியின் கருத்து பற்றி நான் பேசவில்லை: சந்தீப் பாட்டீல்

4 வேகப்பந்து வீச்சாளர்களை ஆடச்செய்வதைப் பற்றிய முந்தைய டெஸ்ட் கேப்டன் தோனியின் விமர்சனம் குறித்து அணித்தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் தேர்வுக் கொள்கைகள் குறித்து தோனியின் கருத்து பற்றி சந்தீப் பாட்டீலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அமைதியாக ஆனால் அதே வேளையில் நாசுக்காக பதில் அளித்தார் சந்தீப் பாட்டீல்.

முந்தைய பிசிசிஐ தலைமையில் அணித் தேர்வுக்குழு தலைவர் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 2 மாதங்களில் 3-வது முறையாக சந்தீப் பாட்டீல் செய்தியாள்ர்களிடம் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “மகேந்திர சிங் தோனி என்ன கூறினார் என்பது பற்றி நான் பேசவில்லை. அணியில் ஒரு சமச்சீரான தன்மை வேண்டும் என்பதையே நாங்கள் சிறிது காலமாக முயற்சி செய்து வருகிறோம். இலங்கை பிட்ச் நிலவரங்களுக்கு இதுவே சிறந்த பந்துவீச்சுச் சேர்க்கையாகும். எனவே அனைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் அவ்வாறு உணர்ந்தோம், அதன் படி தேர்வு செய்துள்ளோம்” என்றார்.

வேகப்பந்து வீச்சுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி தோனியின் விமர்சனம் காயப்படுத்தியதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாட்டீல், “ஒரு கேப்டன் கருத்து கூற எங்கள் தரப்பிலிருந்து எந்த வித ஆட்சேபணையும் இல்லை, பிசிசிஐ-தான் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும்.

நாம் பார்த்ததிலேயே தோனி ஒரு சிறந்த தலைவர் என்பதை நாம் அறிவோம். அதனால் பவுலர்கள் குறித்து கருத்து கூற அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு” என்றார்.

அடுத்ததாக, தோனியின் நம்பிக்கைக்குரிய சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கோலியின் அணியில் இடம்பெறவில்லையே என்று செய்தியாளர்கள் மேலும் திருக, “அணித்தலைவர் மாறும் போது அணிச்சேர்க்கையிலும் மாற்றங்கள் இருக்கவே செய்யும். ஒவ்வொரு கேப்டனுக்கும் அவர்கள் அணியை வழிநடத்தும் போது பலதரப்பட்ட பார்வைகள் இருக்கும். ஒருவர் ஆக்ரோஷ கேப்டனாக இருக்கலாம், ஒருவர் தற்காப்புணர்வு கேப்டனாக இருக்கலாம், ஆம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் கேப்டனின் அணுகுமுறையும் அணித்தேர்வை விளக்குவதாக அமையும்.

விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. சச்சின், கங்குலி, திராவிட், லஷ்மண் ஓய்வு பெற்றவுடன் இவர்களுக்கு மாற்று வீரர்கள் உடனடியாகக் கிடைப்பார்களா என்று நினைத்தோம், ஆனால் இப்போது உள்ளவர்கள் மாற்று வீரர்களாக திகழ்கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x