

கொல்கத்தா,
55 ஆண்டுகளுக்குப்பின முதல் முறையாக இந்திய டென்னிஸ் டேவிஸ் கோப்பைப் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்ல உள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஒசியானா குரூப ஒன் பிரிவு டென்னிஸ் போட்டி செப்டம்பரில் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்திய அணி கடைசியாக கடந்த 1964-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு டேவிஸ் கோப்பைக்காக சென்று 4-0 என்ற கணக்கில் வென்று நாடு திரும்பியது. அதன்பின் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குபின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில் சர்வதேச டென்னிஸ் அமைப்பு(ஐடிஎப்), டேவிஸ் கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. ஏறக்குறைய 12-ஆண்டுகளுக்குப்பின் டேவிஸ் கோப்பையை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறஇருக்கிறது.
பாகிஸ்தானில் சென்று இந்தியஅணி டேவிஸ் கோப்பையில் பங்கேற்குமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அனுமதி அளித்தது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப்பின் இரு அணிகளும் முதல்முறையாக நேருக்கு நேர் மோத உள்ளது.
பாகிஸ்தான் செல்லும் இந்திய டேவிஸ் கோப்பை அணி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது. பெரும்பாலும் தரவரிசை அடிப்படையில் பிரஜ்னீஷ் குன்னீஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல்ஆகியோர் ஒற்றையர் பிரிவுக்கும், ரோஹன் போபன்னா, திவிஜ் சரண் ஆகியோர் இரட்டையர் பிரிவுக்கும்தேர்வுசெய்யப்பட வாய்ப்புள்ளது
இதுகுறித்து இந்திய டென்னிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹிரான்மோவ் சாட்டர்ஜி கூறுகையில், " டேவிஸ் கோப்பைப் போட்டியில் விளையாட இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான விசா வாங்கும் பணியில் இருக்கிறோம். டேவிஸ்கோப்பையில் விளையாடும் இந்திய அணி ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது. இது உலகக் கோப்பை டென்னிஸ் போன்றது. இதில் நாம் விளையாடாமல் புறக்கணத்தால் இந்திய அணி தண்டனைக்குள்ளாக நேரிடும் "எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்