

3 வடிவங்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு சவுரவ் கங்குலி, 3 வடிவங்களுக்கும் ஒரே அணியைத் தேர்வு செய்து சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் ஷுப்மன் கில், ரஹானே போன்றவர்கள் ஒருநாள் அணியில் இடம்பெறாதது ஆச்சரியமளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.
கங்குலியின் இந்தக் கருத்தை மறுத்த வினோத் காம்ப்ளி கூறும்போது,
“பந்தயக்குதிரைகள் என்ற கருத்தாக்கத்தை நம்புபவன் நான். அந்தந்த வடிவத்துக்குரிய சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வதே முறை. இதன் மூலம் வீரர்களை காயங்களிலிருந்து பாதுகாக்க முடியும். நிறைய வீரர்களை இருப்பில் வைத்திருப்பதன் மூலம் நிர்வாகம் அவர்களை பெரிய தொடர்களான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற தொடர்களில் பயன்படுத்த முடியும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும் இம்முறையையே பின்பற்றுகின்றன” என்று கூறி கங்குலிக்குப் பதில் தந்துள்ளார்.
கங்குலி முன்னதாகக் கூறும்போது, “அனைத்து வடிவங்களுக்கும் ஒரே மாதிரி அணியைத் தேர்வு செய்யும் கட்டத்துக்கு நாம் வந்து விட்டோம். சில வீரர்கள் மட்டுமே 3 வடிவங்களிலும் ஆடுவது சரியாக இருக்காது. பெரிய அணிகள் சீரான முறையில் திறனை வெளிப்படுத்தும் வீரர்களைக் கொண்டிருக்கின்றனர். அனைவரையும் திருப்தி படுத்துவது என்பதை விட நாட்டுகாக சீரான வீரர்களை எடுப்பதுதான் சரி.
இந்த அணியில் பல வீரர்கள் 3 வடிவங்களிலும் ஆடக்கூடியவர்களே. ரஹானே, ஷுப்மன் கில் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.