இந்தியா ஏ வெற்றிக்குக் காரணமான ஷாபாஸ் நதீம் 10 விக்கெட்; சஹா, துபே அரைசதங்கள்

10 விக். வீழ்த்திய ஷாபாஸ் நதீம். | கோப்புப் படம்.
10 விக். வீழ்த்திய ஷாபாஸ் நதீம். | கோப்புப் படம்.
Updated on
1 min read

நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் ஏ அணியை இந்தியா ஏ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி தங்கள் இரு இன்னிங்ஸ்களில் முறையே 228, 180 ரன்களுக்கு மடிய, இந்தியா ஏ அணி 312 ரன்களை எடுத்து 2வது இன்னிங்சில் 97/4 என்று வெற்றி பெற்றது.

இதில் இந்தியா எ அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் 2 இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகள் என்று டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷிவம் துபே (71), சஹா (66) ஆகியோரது பேட்டிங் பங்களிப்புகள் பெரும் பங்கு வகித்தன. 

ஷாபாஸ் நதீம் முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்சில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். மொத்தம் 109 ரன்களுக்கு 10 விக்கெட்டுகள். இடது கை ஸ்பின்னர் நதீமின் 5வது 10 விக்கெட் அசத்தல் பவுலிங்காகும் இது. மொத்தம் 107 முதல் தர போட்டிகளில் நதீம் மொத்தம் 18 முறை 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றியுள்ளார். 

விருத்திமான் சாஹா காயங்களிலிருந்து மீண்டு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில் இந்திய ஏ முதல் இன்னிங்சில் 134/4 என்ற நிலையில் இறங்கினார். 66 ரன்களை 167 பந்துகளில் எடுத்து முதல் இன்னிங்சில் மே.இ.தீவுகள் ஏ அணியின் 228 ரன்களைக் கடந்து முன்னிலை பெறுவதை உறுதி செய்தார். 

அரைசதத்துடன் இந்த போட்டியில் 5 பேரை ஆட்டமிழக்கவும் செய்துள்ளார்.  மும்பை ஆல் ரவுண்டர் ஷிவம் துபேயுடன் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 124 ரன்களைச் சேர்த்தார் சஹா. பிறகு 4ம் நாளில் இருவரும் 97 ரன்கள் விரட்டலை எளிதாக முடித்துக் கொடுத்தனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in