

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் 50 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வெற் றியை தேடிக்கொடுப்பவர்களாக (மேட்ச் வின்னர்) இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
இலங்கை - வங்கதேசம் அணிகள் நேற்று முன்தினம் கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் மோதின. இந்த ஆட்டத்தில் 315 ரன்கள் இலக்கை துரத்திய வங்கதேச அணியானது 41.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. லஷித் மலிங்கா 9.4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்களுடன் 38 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்துடன் 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து மலிங்கா ஓய்வு பெற்றார். 2004-ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான மலிங்கா, 226 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் 337 விக்கெட்கள் சாதனையை மலிங்கா முறியடித்துள்ளார்.
மேலும் இலங்கை வீரர்களின் முத்தையா முரளிதரன்(523), சமிந்தா வாஸ்(399) ஆகியோருக் குப் பின் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் மலிங்கா பெற்றுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் கால்பதித்ததில் மலிங்கா முக்கிய பங்குவகித்திருந் தார். மேலும் 2004-ம் ஆண்டு சமிந்தா வாஸ் ஓய்வு பெற்ற பிறகு அணி மாற்றத்துக்கான பாதையை மலிங்கா தனது செயல் திறனால் எளிதாக்கினார்.
தனது கடைசி ஆட்டத்துக்கு பிறகு மலிங்கா கூறுகையில்,“எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்துள்ளேன். அனைத்து இளம் வீரர்களும் இதையே செய்வார்கள் என நம்புகிறேன். மேட்ச் வின்னராக இருந்தால் மட்டுமே கிரிக்கெட்டில் வெகுதூரம் செல்ல முடியும்.
எதிர்காலத்தில் நான் இதையே ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அணியில் உள்ள இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை தேடித் தரக்கூடிய செயல்திறன்களை பெற வேண்டும். இவர்தான் வெற்றியை தேடித்தரக்கூடிய பந்து வீச்சாளர் என மக்கள் கூறவேண்டும். அணி யில் உள்ள இரு பந்து வீச்சாளர் களுக்கு அந்த திறன் உள்ளது. இனி அவர்களின் செயல்திறனை கவனிக்க வேண்டும்.
கடந்த 15 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடி உள்ளேன். மக்களுக்காக விளை யாடியது உண்மையிலேயே பெரு மையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இவர்கள் எப்போதும் என் பின்னால் இருந்துள்ளனர். நான் விலகிச் செல்ல வேண்டிய நேரம் இதுதான் என உணர்ந்தேன். ஏனெனில் 2023-ம் ஆண்டு நடை பெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கான அணியை நாம் கட்டமைக்க வேண்டும். இதை உணர்ந்துதான், சரி நமது நேரம் முடிந்து விட்டது என்று கிளம்பு கிறேன்” என்றார்.
91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.