

கிரிக்கெட்டுக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி, என சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒய்வுப் பெற்றுள்ள இலங்கை வீரர் மலிங்காவுக்கு இந்திய வீரர் பும்ரா நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா, வங்கதேச அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த போட்டியுடன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நேற்று நடந்த போட்டியில் இலங்கை, வங்க தேசத்தை வீழ்த்தியது. 3 விக்கெட்டுகளுடன், கடைசி பந்தில் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியுடன் ஒய்வு குறித்து மலிங்கா “இளைஞர்களுக்கு வழிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக” தெரிவித்துள்ளார்.
மலிங்கா ஒய்வு பெறுவது குறித்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “ கிரிக்கெட்டுக்கு நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. உங்களை முன்மாதிரியாக எப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறேன்... அதனைத் தொடருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவும் லர் மலிங்காவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். ரோஹித் சர்மாவும், பும்ராவும் மலிங்காவுடன் ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர்.