

இஸ்லாமாபாத், ஏஎன்ஐ
பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியில் நீண்டகாலம் இடம் பெறாமல் இருந்த நிலையில், அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை என்ற அடிப்படையில் உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் அணிக்கு ஆமிர் தேர்வு செய்யப்பட்டார்.
உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறினாலும், 8 ஆட்டங்களில் முகமது அமீர் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி 7-வது இடத்தில் இருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிஆட்டத்தில் இந்திய அணியை விரைவாகச் சுருட்டி கோப்பையை வெல்ல ஆமிரின் பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது.
பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான முகமது ஆமிர் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது பெரிய இழப்பாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் ஆமிரின் ஓய்வு பாகிஸ்தானுக்கு பின்னடைவாகத்தான் இருக்கும்.
தனது ஓய்வு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்தில் முகமது ஆமிர் குறிப்பிட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் அணிக்காக பாரம்பரிய போட்டியான டெஸ்ட் ஆட்டங்களில் நான் விளையாடி இருப்பது எனக்கு மிகப்பெருமையாக இருக்கிறது. நான் இப்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
பாகிஸ்தான் அணிக்காக நான் தொடர்ந்து விளையாடுவதுதான் எனது முதன்மையான நோக்கம், விருப்பம். அடுத்துவரும் போட்டிகள், ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக பங்கேற்று என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை அளிப்பேன். என்னுடைய இந்த ஓய்வு முடிவு எளிதானது அல்ல நீண்ட ஆய்வுக்குப் பின்தான் எடுத்தேன்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் நேரத்தில், பாகிஸ்தான் அணிக்கு சில சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் வர இருக்கிறார்கள், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு நான் ஓய்வு பெறுவதுதான் சரியான நேரம். அதற்கு ஏற்றார்போல் தேர்வாளர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். சிறந்த பல அணிகளுக்கு எதிராக நான் பந்துவீசியது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் நான் தொடர்ந்து எனக்குரிய பாதையை தேர்வு செய்து விளையாடுவேன்.
எனக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும், என்னை பல்வேறு கட்டங்களில் வளர்த்த பயிற்சியாளர்களுக்கும், எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரா கல்லே நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முகமது அமிர் அறிமுகமாகினார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அமிர் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் சிறப்பாக 2017 ஏப்ரல் மாதம் கிங்ஸ்டனில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடந்த டெஸ்ட்போட்டியில் 44 ரன்களுக்கு 6 விக்கெட் அமிர் வீழ்த்தியதே சிறந்ததாகும்.