

லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் இங்கிலாந்து 3ம் நாளான இன்று முதல் பந்திலேயே கடைசி விக்கெட்டை இழந்து 303 ரன்களுக்கு தன் இரண்டாவது இன்னிங்ஸில் மடிந்தது. இதன் மூலம் அயர்லாந்து அணி இங்கிலாந்தை லார்ட்ஸில் வீழ்த்தி வரலாறு படைக்க 182 ரன்கள் தேவை.
முதல் இன்னிங்சில் 85 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சியளித்த இங்கிலாந்து பிறகு அயர்லாந்து அணியை 207 ரன்களுக்குச் சுருட்டியது, 122 ரன்கள் முன்னிலை பெற்ற அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் எழுச்சியைக் கண்டது, அந்த அணியின் எம்.ஜே.லீச் 92 ரன்களையும் அதிரடி ஜேசன் ராய் 78 பந்துகளில் 72 ரன்களையும் எடுக்க நல்ல அடித்தளம் அமைத்தது.
ஆனால் முதல் இன்னிங்ஸ் போலவே அதன் பிறகு டென்லி, பேர்ஸ்டோ, மொயின் அலி, ரூட், கிறிஸ் வோக்ஸ் என வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 171/1 என்ற நிலையிலிருந்து 248/8 என்று சரிந்தது.
ஆனால் அதன் பிறகு சாம் கரண் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 ரன்களையும், ஸ்டூவர்ட் பிராட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்களையும் எடுக்க ஸ்கோர் 303 ரன்களை எட்டியது.
அயர்லாந்து தரப்பில் அடைர் 3 விக்கெட்டுகளையும் தாம்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அயர்லாந்து வெற்றி பெற்று வரலாறு படைக்க 182 ரன்கள் வெற்றிக்குத் தேவை. இன்று முழுநாளும், நாளை ஒருநாளும் உள்ளன. இப்போதைக்கு அங்கு மழை வந்ததால் அயர்லாந்து 2வது இன்னிங்ஸ் தடை பட்டுள்ளது.