

சிட்னி:
உலகக்கோப்பை ஹீரோ பென் ஸ்டோக்ஸின் புதிய முதிர்ச்சி ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸையும் ஆண்ட்ரூ பிளிண்டாஃபையும் ஒப்பிட்டு ரிக்கி பாண்டிங் ஆஷஸ் அச்சுறுத்தலை முடுக்கி விட்டுள்ளார்/
ரிக்கி பாண்டிங் இது தொடர்பாக கூறியதாவது:
பென் ஸ்டோக்ஸ் தற்போது ஆடும் விதம் நிறைய முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அவர் எப்போதும் ஒரு அவசரத்தில் இருப்பார், ஆனால் தற்போது நிதானம் அவரிடம் பிறந்துள்ளது.
அவரது ஆளுமையைப் பார்க்கும் போது பெரிய, வலிமையான, கோபமான ஒரு வீரராகவும் கொஞ்சம் ஈகோ அதிகமுள்ளவராகவும் தெரிகிறது. இளம் வீரராக இவை அவசியமான சில குணாம்சங்களாகும்.
ஆனால் உலகக்கோப்பையின் போது அவர் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன் ஆட்டத்தை மாற்றிய விதம் அவரிடம் முதிர்ச்சியைக் காட்டுகிறது, மேலும் தன் ஆட்டத்தை அவர் புரிந்து கொள்வதாகவும், அணிக்குத் தேவையானதை புரிந்து கொண்டதாகவும் எனக்குத் தெரிந்தது.
அவருடைய இந்த மாற்றம்தான் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாகப் போகிறது என்று நினைக்கிறேன். ஃப்ரெட்டி அல்லது பிளிண்டாஃப் போன்று ஒரு பெரிய வீரராக இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து அணியின் உண்மையான இருதயத் துடிப்பாக இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து எப்போது பிரச்சினைகளைச் சந்தித்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது, இப்படிப்பட்ட வீரர்கள் அவர்களுக்குக் கிடைக்கிறார்கள்.
தொடரை வெல்ல வேண்டுமெனில் பென் ஸ்டோக்ஸை பிரகாசிக்க விடாமல் தடுக்க வேண்டும் ஆஸ்திரேலிய அணியினர்.
இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.