Published : 25 Jul 2019 09:52 AM
Last Updated : 25 Jul 2019 09:52 AM

ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கும் ரூ.1.35 கோடி பெறும் கேப்டன் விராட் கோலி

புதுடெல்லி:

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதற்கு அதிக தொகையை ஊதியமாக பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். முதல் இடத்தை போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தொழிலதிபர்கள் கணக்குகளைத் தொடங்கி ஆர்வமாக கருத்துகளையும், படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக உள்ளார். அவரது பக்கத்தை 3.6 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.1,35,66,749 ரொக்கம் பெறுகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் அவர் 9-வது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் ரூ. 6,73,49,082 பெறுகிறார்.2-வது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரும், 3-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியும், 4-வது இடத்தில் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காமும் உள்ளனர்.

5-வது இடத்தை கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸும், 6-வது இடத்தை கால்பந்து வீரர் ரொனால்டினோவும், 7-வது இடத்தை கால்பந்து வீரர் காரெத் பாலேவும், 8-வது இடத்தை கால்பந்து வீரர் லாட்டன் இப்ராஹிமோவிக்கும், 10-வது இடத்தை கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரெஸும் பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள வீரர்களில் விராட் கோலி மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x