சொந்த மண்ணில்  குறைந்த ஓவர்களில் ஆல் அவுட்: உ.கோப்பை உச்சத்துக்குப் பிறகு இங்கிலாந்துக்கு அயர்லாந்து கொடுத்த பேரதிர்ச்சி

கொண்டாடும் அயர்லாந்து பவுலர், வீரர்கள். | ஏ.எப்.பி.
கொண்டாடும் அயர்லாந்து பவுலர், வீரர்கள். | ஏ.எப்.பி.
Updated on
2 min read

லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 23.4 ஒவர்களில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்கள் சொந்த மண்ணில் குறைந்த ஓவர்களில் ஆல் அவுட் ஆகி இழிவுபட்டுள்ளது உலகசாம்பியன் இங்கிலாந்து அணி.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை எடுப்போம் என்று டாஸின் போது கூறினார். ஆனால் 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பிறகு 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தவிக்கிறது. 

அயர்லாந்து அணியில் முர்டாக் 13 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் அடைர் 3 விக்கெட்டுகளையும் ரான்கின் 3 ஓவர் 1 மெய்டன் 5 ரன்கள் 2 விக்கெட் என்றும் இங்கிலாந்தை சரித்தனர்.

இதுவரை இங்கிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் 23.4 ஓவர்கள் என்ற குறைந்த ஓவர்களில் டெஸ்ட் போட்டியில் மடிந்தது இல்லை. 1995ம் ஆண்டு மே.இ.தீவுகளுக்கு எதிராக பர்மிங்ஹாமில் 30 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அந்தப்போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியில் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பர்ன்ஸ், ராய், ரூட், டென்லி, பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், பிராட், லீச், ஸ்டோன் ஆகிய லெவனுடன் களமிறங்கியது. 

அறிமுக டெஸ்ட்டில் களமிறங்கிய அதிரடி ஒருநாள் வீரர் ஜேசன் ராய், 5 ரன்களில் முர்டாக் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். டென்லி இறங்கி 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து அடைர் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆகி வெளியேறினார். 36/1 என்று இருந்த இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து அடுத்த 7 ரன்களில் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து திண்டாடி வருகிறது.  ரோரி பர்ன்ஸ் 6 ரன்களில் ஆடாமல் விட வேண்டிய பந்தை ஆடி எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் கேட்சில் முர்டாக் பந்தில் வெளியேறினார் 36/3.  

கேப்டன் ஜோ ரூட் 2 ரன்களில் நேர் பந்தில் எல்.பி.ஆகி அடைர் பந்தில் வெளியேறினார்.  பேர்ஸ்டோவும் பொறுப்பற்ற ஷாட்டில் நேர் பந்தில் முர்டாகிடம் பவுல்டு ஆக அதே ஒவரில் கிறிஸ் வோக்ஸ் எல்.பி.ஆகி இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். மொயின் அலியும் முர்டாகிடம் எட்ஜ் ஆகி டக் அவுட் ஆக 43 ரன்களுக்கு 7 விக்கெட் என்று இங்கிலாந்து திக்கித் திணறியது. 

சாம் கரணும், ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து 15 ரன்களை மட்டுமே சேர்த்து ஸ்கோர் 50ஐக் கடக்க உதவினர், பிராட் 3 ரன்களில் ரான்கினிடம் வெளியேற சாம் கரனும் ரான்கினிடம் 18 ரன்களில் காலியானார். கடைசியில் ஸ்டோன் 18 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுக்க 23.4 ஒவர்களில் 85 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. 

ஜூலை 14ம் தேதியன்று சர்ச்சைகளுக்கு இடையில் வெளீர் நீல உடையில் உலகக்கோப்பையை முதன் முதலில் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து, அந்த துள்ளாட்டம், மகிழ்ச்சி இவ்வளவு விரைவில் மறைந்து போகுமாறு அயர்லாந்திடம் இன்று ஆகக்குறைந்த ஓவர்களில் மடிந்து புதிய தாழ்வை அடைந்தது. உயர்வும் தாழ்வும் விளையாட்டில் நிரந்தரமல்ல என்பதை அயர்லாந்து, இங்கிலாந்துக்கு இன்று அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in