

லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து திக்கித் திணறி வருகிறது. இது 4 நாள் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை எடுப்போம் என்று டாஸின் போது கூறினார். ஆனால் 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது ஒருநாள் உலக சாம்பியன் அணி.
இங்கிலாந்து அணியில் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பர்ன்ஸ், ராய், ரூட், டென்லி, பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், பிராட், லீச், ஸ்டோன் ஆகிய லெவனுடன் களமிறங்கியது.
அறிமுக டெஸ்ட்டில் களமிறங்கிய அதிரடி ஒருநாள் வீரர் ஜேசன் ராய், 5 ரன்களில் முர்டாக் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். டென்லி இறங்கி 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து அடைர் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆகி வெளியேறினார். 36/1 என்று இருந்த இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து அடுத்த 7 ரன்களில் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து திண்டாடி வருகிறது. ரோரி பர்ன்ஸ் 6 ரன்களில் ஆடாமல் விட வேண்டிய பந்தை ஆடி எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் கேட்சில் முர்டாக் பந்தில் வெளியேறினார் 36/3.
கேப்டன் ஜோ ரூட் 2 ரன்களில் நேர் பந்தில் எல்.பி.ஆகி அடைர் பந்தில் வெளியேறினார். பேர்ஸ்டோவும் பொறுப்பற்ற ஷாட்டில் நேர் பந்தில் முர்டாகிடம் பவுல்டு ஆக அதே ஒவரில் கிறிஸ் வோக்ஸ் எல்.பி.ஆகி இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். மொயின் அலியும் முர்டாகிடம் எட்ஜ் ஆகி டக் அவுட் ஆக 43 ரன்களுக்கு 7 விக்கெட் என்று இங்கிலாந்து திக்கித் திணறி வருகிறது.
சற்று முன் வரை சாம் கரண் 12 ரன்களுடனும் பிராட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இங்கிலாந்து 58/7 என்று திண்டாடி வருகிறது. அயர்லாந்து அணியில் 37 வயது ஸ்விங் பவுலர் முர்டாக் 9 ஓவர் 2 மெய்டன் 13 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.