Published : 24 Jul 2019 11:48 AM
Last Updated : 24 Jul 2019 11:48 AM

அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடும் ரஹானே, சுப்மான் கில்-லை ஏன் தேர்வு செய்யவில்லை?- கங்குலி கேள்வி

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் அஜின்கயே ரஹானே மற்றும் சுப்மான் கில் இருவரையும் மே.இ.தீவுகள் தொடருக்கு ஏன் தேர்வு செய்யவில்லை? என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆகஸ்ட் மாதம் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் அஜின்கயே ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், இளம் வீரர் சுப்மான் கில் டி20 போட்டி, ஒருநாள், டெஸ்ட் என எதிலும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே கில், ரஹானே இருவரும் புறக்கணிக்கப்பட்டது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியதற்கு முக்கியக் காரணம் 4-வது இடத்தில் வலுவான பேட்ஸ்மேன் இல்லாததுதான். 

ரஹானே போன்ற அனுபவம் மிக்க வீரர், 4-வது இடத்தில் இருந்திருந்தால், பெரும்பாலான நேரங்களில் விக்கெட் சரிவைத் தடுத்திருக்கலாம். இந்தக் கருத்தை முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின், கம்பீர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். அஜின்கயே ரஹானேவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதில் ரஹானே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி நல்ல ஃபார்மில் இருந்ததால் உலகக்கோப்பை போட்டிக்குத் தேர்வு செய்திருக்கலாம். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து ரஹானேவை ஒதுக்கிவைத்து டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்து வருகின்றனர். 

ரஹானே, சுப்மான் கில் இருவரையும் நீக்கியது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்திலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஆனால், ஏனோ, சுப்மான் கில், அஜின்கயே ரஹானே இருவரையும் தேர்வு செய்யாமல் விட்டிருப்பது வியப்பை அளிக்கிறது.

அணியில் நம்பிக்கை, வலிமையை அதிகரிக்க மூன்று தரப்புப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்ய இந்தியத் தேர்வாளர்களுக்கு இது சரியான நேரம். சில வீரர்கள் மட்டுமே அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுகிறார்கள். சிறந்த அணிக்கு, நிலைத்தன்மையுடன் விளையாடும் வீரர்கள் அவசியம். அனைவரையும் நாம் மகிழ்ச்சிப்படுத்த முடியாது. ஆனால், நிலைத்தன்மையுடன் அணி செயல்பட, நாட்டுக்காக சிறந்த வீரர்களைத் தேர்வு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

19 வயதான சுப்மான் கில் சமீபத்தில நியூஸிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்திய ஏ அணியில் இடம் பெற்று விளையாடிய சுப்மான் கில், மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 218 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x