Published : 23 Jul 2019 09:17 PM
Last Updated : 23 Jul 2019 09:17 PM

மான்செஸ்டர் விமானநிலையத்தில் என்னை அவமானப்படுத்தினர்: வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு

இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தன்னை அதிகாரிகள் மிக மோசமாக நடத்தியதோடு அனைவர் முன்னிலையிலும் அவமானகரமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்.

வாசிம் அக்ரம் நீரிழிவு நோயாளி என்பதால் அவர் விளையாடிய காலத்தில் கூட இன்சுலின் எடுத்துக் கொண்டு ஆடுபவர், இந்நிலையில் அவர் இன்சுலின் வைத்திருந்த குளிர்பதனப் பெட்டியிலிருந்து அதை எடுத்து பிளாஸ்டிக் பையில் வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தி தெரிவிக்கும் போது:

“மான்செஸ்டர் விமானநிலையத்தில் மனம் உடைந்து போனேன். நான் என் இன்சுலின் பெட்டியுடன் தன உலகம் முழுதும் சுற்றி வருகிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னை யாரும் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டதில்லை. 

மிகவும் மோசமான முறையில் அவர்கள் என்னை விசாரித்ததில் என்னை இழிவு படுத்தியதாக உணர்கிறேன். பொதுவெளியில் என் இன்சுலின் பெட்டியை எடுத்து பிளாஸ்டிக் பையில் திணிக்க கடும் உத்தரவிடப்பட்டேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதனை கவனமேற்கொண்ட மான்செஸ்டர் விமான நிலைய நிர்வாகம், பதில் ட்வீட்டில், “ஹை வாசிம், எங்கள் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு நன்றி. எங்களுக்கு நேரடியாக இந்த புகாரை அனுப்ப முடியுமா? ஆகவே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று பதிலளித்துள்ளது. 

இதற்குப் பதில் அளித்த வாசிம் அக்ரம், “உங்களது உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.  

“நான் எனக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரவில்லை. யாரை கையாண்டாலும் ஒரு அக்கறை வேண்டும் என்றுதான் கோருகிறேன். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கைகள் பற்றி நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அதற்காக இழிவு படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல” என்று இன்னொரு ட்வீட்டில் கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x