ஓய்வு பற்றி தோனி முடிவு செய்வார், இனிமேல், ரிஷப் பந்த்தான்: எம்.எஸ்.கே. பிரசாத் வெளிப்படை

தோனி, ரிஷப் பந்த் : கோப்புப்படம்
தோனி, ரிஷப் பந்த் : கோப்புப்படம்
Updated on
2 min read

மும்பை, பிடிஐ

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் மூன்றிலும் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அதிகமான பயிற்சி அளித்து வளர்க்க வேண்டும் என்று தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 3-ம் தேதியில் இருந்து மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்தியஅணி இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது.

இதில் மகேந்திர சிங் தோனி, பும்ரா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அடுத்த 2 மாதம், ராணுவத்தில் பணியாற்ற இருப்பதால், தான் தொடரில் பங்கேற்கவில்லை என தோனி தெரிவித்துவிட்டார். அதேசமயம், தோனிக்கு அடுத்த இடத்தில் விக்கெட் கீப்பரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ரிஷப் பந்துக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3 விதமான தொடரிலும் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். விருதிமான் சாஹா டெஸ்ட் தொடருக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டியில் தோனியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்ததால், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், தோனியோ, இப்போதைக்கு ஓய்வு குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், அணித் தேர்வு குறித்து அறிவித்த பின், தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தோனி போன்ற மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எப்போது ஓய்வு அறிவிப்பு வெளிய வேண்டும் என்று தோனிக்கு தெரியும்.

தேர்வுக் குழுவைப் பொருத்தவரை அடுத்து எதிர்காலத்தில் என்ன மாதிரி தயாராக வேண்டும் என்பது தேர்வுக்குழுவிடம்தான் இருக்கிறது. தோனியின் ஓய்வு குறித்து இதற்குமேல்விவாதிக்க வேண்டாம்.

முதலில் இந்த தொடருக்கு தோனி இல்லை. 2-வது தோனிக்கு பதிலாக இளம் வீரர்களை நாங்கள் தயார் செய்ய தொடங்கிவிட்டோம். உலகக்கோப்பைப் போட்டிக்கு முன், அதன்பின் என திட்டங்கள் வகுத்திருந்தோம்.

அதன்படி ரிஷப் பந்துக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கி அவரை தயார்செய்வோம். இதுதான் எங்களுடைய திட்டம், தோனியுடன் ஆலோசனை நடத்திய பின்புதான் இதை செய்து வருகிறோம். ரிஷப் பந்த் அடிக்கும் சில ஷாட்கள் அவ்வப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தாலும், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாகவே விளையாடினார். அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

அம்பதி ராயுடுவை உலகக்கோப்பைப் போட்டிக்கு தேர்வு செய்யாதது குறித்தும், விஜய் சங்கரை முப்பரிமான வீரர் என்று பிரசாத் புகழந்ததற்கு 3டி கண்ணாடி அணிந்து உலகக்கோப்பையை பார்க்கப்போகிறேன் என்று ராயுடு ட்விட் செய்தது, ராயுடு ஓய்வு அறிவிப்பு ஆகியவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் பதில் அளிக்கையில், " ராயுடுவின் அந்த ட்விட் உண்மையில் அழகானது. அந்த ட்விட்டை பார்த்து நான் ரசித்தேன். ஆனால், அது எந்த அளவுக்கு அது பாதித்தது எனத் தெரியவில்லை. ராயுடுவை அணிக்குள் தேர்வு செய்யாததில் எந்தவிதமான அரசியலும், சார்பும் கிடையாது.

அணிக்குத் தேவையான கலவை வீரர்கள் அடிப்படையில்தான் ராயுடு தேர்வு செய்யப்படாமல் இருந்திருக்கலாம். விஜய் சங்கர், ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட சூழலும் தேவையும்தான் காரணம். சார்புக்கு அப்பாற்பட்டுத்தான் தேர்வு செய்யப்பட்டார்கள்.

ராயுடு குறித்து சின்ன உதாரணம் கூறுகிறேன். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு 18 டி20 போட்டிகள் வரை வாய்ப்பு அளித்தோம், ஒருநாள் தொடரிலும் இடம் பெறவைத்தோம். ஆனால், தொடர்நது ராயுடுவின் செயல்பாட்டால் அதிகமான விமர்சனங்கள் எழுந்தன.

உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்தார், யோயோ தேர்வில் தேரவில்லை இருப்பினும் தேர்வுக்குழுவினர் அவருக்கு ஆதரவாகவே இருந்தோம். இங்கிலாந்து தொடருக்கும், நியூஸிலாந்து தொடருக்கும் தேவையின் அடிப்படை, வீரர்கள் கலவையின் அடிப்படையில் தேர்வு செய்தோம். ஆதலால், சார்பாக நடந்து கொண்டோம், சில வீரர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு ராயுடுவை தேர்வு செய்யவில்லை என்பது தவறானது

ராயுடு உணர்ச்சிவசப்பட்டு ஓய்வு முடிவு எடுத்தது எங்களுக்குத் தெரியும், எங்களுக்கும் அவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in