Published : 19 Jul 2019 08:46 PM
Last Updated : 19 Jul 2019 08:46 PM

தோனிக்கு ஓய்வு பெறும் உடனடி திட்டம் எதுவும் இல்லை:  நீண்ட கால நண்பர், வர்த்தக நிர்வாகி அருண் பாண்டே திட்டவட்டம்

தோனி. | கெட்டி இமேஜஸ்.

தோனி ஓய்வு பெறப்போவதாக சில நாட்களாக செய்திகள் வதந்தி ரூபங்களில் பேசப்பட்டு வரும் நிலையில்  உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று தோனியின் நெருங்கிய நண்பரும், வர்த்தக நிர்வாகி மற்றும் கூட்டாளியான அருண் பாண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

மே.இ.தீவுகளில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது, இதற்கான அணி வரும் ஞாயிறன்று தேர்வு செய்யப்படுகிறது. இதனையடுத்து தோனி அணியில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன. முன்னாள் வீரர்கள் சேவாக், கம்பீர் ஆகியோரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் வர்த்தகக் கூட்டாளி அருண் பாண்டே கூறியிருப்பதாவது:

“ஓய்வு பெறும் திட்டம் உடனடியாக ஏதுமில்லை.  ஒரு கிரேட் ப்ளேயர் ஓய்வு குறித்த தீராத யூகங்கள் துரதிர்ஷ்டமே” என்று யூகங்களுக்கு முடிவு கட்டினார்.

பாண்டே, தோனியுடன் நீண்ட காலமாக இருந்து வருகிறார், தோனியின் வர்த்தக நலன்களை இவர் பார்த்துக் கொள்வதோடு, ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனமான ரீதி ஸ்போர்ட்ஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

எம்.எஸ்.தோனியின் சந்தை பிராண்ட் மதிப்பு டஃப் அண்ட் பெல்ப்ஸ் கணிப்புகளின் படி 26.9 மில்லியன் டாலர்களாகும். 2019-ம் ஆண்டில் மட்டும் அவர் ரெட்பஸ், கோல்கேட், கோககோலாவின் ஸ்போர்ட்ஸ் பானம் பவரேட், எஸ்.ஆர்.எம்.பி. ஸ்டீல் ஆகிய நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளார். 2018-ல் இவர் வணிக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள்: பாரத் மேட்ரிமோனி, மாஸ்டர்கார்ட், ரியால்டி நிறுவனம் சமுத்ரா, மார்ஸ் ஸ்னிக்கர்ஸ், ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸ், சவுண்ட் லாஜிக், வார்ட்விஸ், ட்ரீம் லெவன் ஃபாண்டசி ஸ்போர்ட்ஸ், இண்டிகோ பெயிண்ட்ஸ், கோ டாடி, லிவ்ஃபாஸ்ட் ஆகியவையாகும். 

“எம்.எஸ்.தோனி கோககோலாவின் பவரேட் பிராண்டுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இப்போதைக்கு அவர் 30 பிராண்டுகளுடன் வர்த்தக, விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து வருகிறார்” என்று அருண் பாண்டே ஜூன் 17ம் தேதி கூறியது  இகானமிக் டைம்ஸ் இதழில் வெளியானது. ஒவ்வொன்றுமே மிகப்பெரிய தொகைக்கான வர்த்தக விளம்பர ஒப்பந்தங்கள் என்று தெரிகிறது. 

2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் திடீர் ஓய்வு பெற்றவுடன் தோனியின் பிராண்ட் மதிப்பு சரிவு கண்டது, ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அவரது பிராண்ட் மதிப்பு, வர்த்தக விளம்பர ஒப்பந்தங்கள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாக வணிக-விளம்பரத் துறை ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆகவே குறைந்தது 2022-23 வரையும் அதையும் தாண்டியும் அவரது பிராண்ட் ஒப்பந்தங்கள் இருக்க வாய்ப்புள்ளது. எப்படி அவர் ஓய்வு பெற முடியும்? என்பதே கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது கேள்வியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x