

இந்திய அணியின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பட்சத்தில் அணித்தேர்வுக்குழுவினர் தோனியிடம் தங்கள் திட்டத்தில் தோனி இல்லை என்பதை அவரிடமே தெளிவுபடுத்துதல் நல்லது என்று அதிரடி முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவது தோனியின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறும் சேவாக், அணித்தேர்வுக்குழுதான் தங்கள் திட்டத்தை அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்தி சேனல் ஒன்றில் நடந்த குழு விவாதத்தில் கம்பீர், சேவாக், சந்தீப் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சேவாக் தன் கருத்தைக் கூறும்போது, “தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதை அவர் முடிவுக்கு விட்டு விட வேண்டும். மாற்றம் வேண்டும் இந்திய அணி எதிர்காலத்தை முடிவு செய்வதென்றால் அவர் அதில் இல்லை என்பதை அவருக்கு அறிவுறுத்த வேண்டும். தேர்வுக்குழுவினர் என்னிடமுமே என் திட்டம் என்னவென்று கேட்டிருக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன்” என்றார் சேவாக்.
சேவாக் 2013-ல் அணியிலிருந்து கழற்றி விடப்படுகிறார், அப்போது சந்தீப் பாட்டீல்தான் அணித்தேர்வுக்குழு தலைவராக இருந்தார். 2013-ல் நீக்கப்பட்ட பிறகு சேவாக் மீண்டும் அணிக்குள் திரும்பி வரவேயில்லை.
சேவாக் இவ்வாறு கூறியவுடன் சந்தீப் பாட்டீல் சேவாகிடம் மன்னிப்பு கேட்டார். அவர் இது தொடர்பாக அதே நிகழ்ச்சியில் கூறிய போது,
“சச்சின் டெண்டுல்கரின் திட்டங்கள் குறித்து பேச என்னிடமும் ராஜிந்தர் சிங் ஹான்சிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது, சேவாகின் திட்டங்கள் குறித்துப் பேச விக்ரம் ராத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார். நாங்கள் ராத்தோரிடம் கேட்டோம், அவர் சேவாகிடம் பேசிவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் விக்ரம் ராத்தோர் தன்னிடம் பேசவில்லை என்று சேவாக் கூறுகிறார் என்றால் நான் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் பாட்டீல்.
சேவாக் மீண்டும் இதற்கு பதில் அளிக்கும் விதமாகக் கூறிய போது, “விக்ரம் ராத்தோர் என்னிடம் நான் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு வந்து பேசினார். நீக்கும் முன் பேசியிருந்தால் அதுதான் அர்த்தமுள்ளது. அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு என்னத்துக்காக ஒரு வீரரிடம் பேச வேண்டும்? தோனி நீக்கப்பட்ட பிறகு பிரசாத் அவரிடம் பேசியிருந்தால் தோனி என்ன கூறியிருப்பார், தான் முதல் தர கிரிக்கெட்டில் ஆடி ரன்களைச் சேர்த்தால் தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருப்பார். அதாவது அணியிலிருந்து நீக்கப்படும் முன் வீரர்களிடம் பேச வேண்டும்.” என்றார்.
ஆனால் இந்தக் கருத்தை கபில்தேவ் மறுக்கும் விதமாகக் கூறிய போது, “ஒரு வீரரைத் தேர்வு செய்வதற்கு முன் அவரிடம் தேர்வுக்குழுவினர் பேசுவதில்லை எனும்போது நீக்கப்படும் போது பேச வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?” என்றார்.