

ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு ஐசிசி தடை விதித்தது, இதனால் ஐசிசி தொடர்களில் அந்த அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து ஜிம்பாப்வே வீரர்கள் அனைவரும் விரக்தியும் வேதனையும் அடைந்துள்ளன.
ஏமாற்றம், சோர்வு, இருதயம் உடைந்தது ஆகிய வார்த்தைகளைத்தான் அந்த அணியின் சிகந்தர் ரஸா பயன்படுத்தினார். வீரர்கள் அனைவரும் தங்களுக்கிடையே குறுஞ்செய்தியில் வேதனையையும் விரக்தியையும் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
கடந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் தோல்வி தழுவி 2019 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற முடியாமல் போன போது ஏற்பட்ட வேதனையை விட இது பயங்கரமானது என்கின்றனர்.
இந்நிலையில் அந்த அணியின் சிகந்தர் ரஸா ஈஎஸ்பிஎன்-கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும்போது, “இப்போதைக்கு நாங்கள் இருதயம் உடைந்து போயுள்ளோம். இன்னமும் நாங்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்கள் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு அல்ப ஆயுசில் முடிந்து விட்டதா என்று நினைக்கும் போது இருதயம் சுக்குநூறாகிறது. என்னால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.
நாங்கள் எங்கு போவது? மீள வழியுண்டா? நாங்கள் தடை செய்யப்பட்டுள்ளோம் என்று தெரிகிறது, ஆனால் எத்தனை காலம் இது நீடிக்கும்? 2 ஆண்டுகள் தடை நீடித்தால் இப்போதிருக்கும் முக்கால்வாசி வீரர்களின் கிரிக்கெட் ஆயுள் அவ்வளவுதான். ஆனால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டிலிருந்து எங்களை சஸ்பெண்ட் செய்ததை ஜீரணிக்க முடியவில்லை.
இதை எப்படிச் செய்ய முடியும் என்று தெரியவில்லை ஆனால் எங்கள் தலையில் இது விழுந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்களான நாங்கள் எங்கு செல்வது, கிளப் கிரிக்கெட்டுக்கா? அல்லது எங்களுக்கு கிரிக்கெட் அவ்வளவுதானா, நாங்கள் எங்கள் கிரிக்கெட் பேக்கை எரித்து விட்டு வேறு வேலை தேட வேண்டியதுதானா? இப்போது நாங்கள் என்ன செய்வது?
என்னால் என்ன கூற முடியும்? எங்கள் கிரிக்கெட்டும் வாழ்வாதாரமும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. நான் என்ன சொன்னாலும் அது செவிடர் காதில் ஊதும் சங்கு போல்தான். கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்கிறார்கள், ஆனால் கிரிக்கெட் தேய்ந்து கொண்டு வருகிறது.
இவ்வாறு சிகந்தர் ரஸா உண்மையில் அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில் பேசினார்.