Published : 19 Jul 2019 08:57 AM
Last Updated : 19 Jul 2019 08:57 AM

கனவை நனவாக்கிய மாரியம்மாள்!- இந்திய கால்பந்து அணியில் நாமக்கல் வீராங்கனை!

கி.பார்த்திபன்

உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு எது தெரியுமா? அதிக நாடுகள் விளையாடும் விளையாட்டு எது தெரியுமா? சிலர் கருதுவதுபோல கிரிக்கெட் அல்ல. கால்பந்துதான் அந்த விளையாட்டு. பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிபா) நடத்தும்  உலகக் கோப்பைக் கால்பந்துப்  போட்டியில் பங்கேற்று விளையாடுவது என்பது ஒவ்வொரு கால்பந்தாட்ட வீரரின் கனவு அல்லது  லட்சியம்.

இந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த கைத்தறி தொழிலாளியின் மகள் பி.மாரியம்மாள். 2020-ல் இந்தியாவில் நடைபெற உள்ள, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் மாரியம்மாள். இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

“சேலம் மாவட்டம் சங்ககிரிதான் சொந்த ஊர். பெற்றோர் பாலமுருகன்-காந்திமதி. கைத்தறி தொழிலாளர்கள். என் அண்ணன், திருச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். அவர் கால்பந்தாட்ட வீரர். அவரைப் பார்த்துதான் எனக்கும் கால்பந்து விளையாட்டு  மீது ஆர்வம் உண்டானது. ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், எனது ஆர்வத்தைப் பார்த்து, பின்னர் கால்பந்து விளையாட ஒப்புக்கொண்டனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்தேன். தற்போது நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறேன். காலை, மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்வேன். ஒடிசா, மணிப்பூர், தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா  மாநிலங்களில் நடைபெற்ற, தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியில் நாமக்கல் அணி சார்பில் பங்கேற்றுள்ளேன்.

 2018-ல் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் கால்பந்துப் போட்டித்தொடரில், நாமக்கல் அணி சார்பில் பங்கேற்றேன். அந்த தொடரில் நான் 12 கோல்கள் அடித்தது, அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்,  இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா, ஒடிசா மாநிலம் கட்டாக் நகரங்களில் தலா 25 நாட்கள் பயிற்சி பெற்றேன். அதில், மைதானத்தில் எப்படி திடகாத்திரமாக நின்று விளையாடுவது, பந்துகளை எவ்வாறு பெற்று,  சக வீரர்களுக்கு பாஸ் செய்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

2020-ல் இந்தியாவில் ஃபிபா நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் நான் இடம் பிடித்துள்ளேன். தமிழக அளவில் நான் மட்டும் தேர்வாகியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே, ஜெர்மனி, பூடான், தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளேன். சாதாரண குடும்பம் என்பதால், விளை யாட்டு காலணி உள்ளிட்டவை வாங்குவதில் சிரமம் உள்ளது. எனினும், பயிற்சியாளர் அளிக்கும் ஊக்கத்தால், எதிர்காலத்தில் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும், பயிற்சியாளராகவும் மாற  வேண்டுமென்ற இலக்கில் பயணிக்கிறேன்.
தொடர் பயிற்சி காரணமாக, பள்ளிக்கு சரிவர செல்ல இயலவில்லை. பயிற்சி மேற்கொள்ள வசதியாக, விடுதியில் இருந்தபடியே படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x