

1964-80ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்காக 75 டெஸ்ட் போட்டிகளை ஆடியவரும் முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் சாப்பல் (இந்தியாவுக்கு பயிற்சியளித்த கிரெக் சாப்பல் அல்ல) சரும புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கதிரியக்கச் சிகிச்சையில் 5 வாரங்கள் போராடி மீண்டுள்ளார்.
ஆனால் அடுத்த மாதம் ஆஷஸ் தொடரில் நிச்சயம் வர்ணனைக்கு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயன் சாப்பல்.
தோள்பட்டை, கழுத்து, பகுதிகளில் சருமப் புற்று நோய் தாக்கி அதற்காக தீவிர ரேடியேஷன் சிகிச்சையை 5 வாரங்கள் எடுத்து கொண்டார் இயன் சாப்பல். இவருக்கு வயது 75.
“70 வயதைக் கடந்து விட்டாலே உடல் பலவீனமடையும், எதிர்ப்புச் சக்திகள் குறைந்து விடும், ஆனால் சில ஆண்டுகளாகவே இதனுடன் நான் வாழப்பழகிக் கொண்டேன்” என்றார்.
பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆஷஸ் டெஸ்ட் தொடங்கும்போது இயன் சாப்பல் வர்ணனைக்குத் தயாராகி விடுவார்.
சகோதரர்கள் கிரெக் சாப்பல், ட்ரவர் சாப்பல் ஆகியோருடன் கூடிய குடும்ப விருந்தில் கூட இவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது.
“நான் என் தாய் மரணப்படுக்கையில் இருந்த போது பார்த்திருக்கிறேன். அப்போதுதான் இந்த ஒரு விஷயத்தை நாம் கையாண்டுதான் ஆகவேண்டும் என்று நினைத்தேன். அது நெருங்கும் போது சவுகரியமாக இருக்க வேண்டும். இப்போதைக்கு சில நாட்களாக இந்த மனநிலையில்தான் உள்ளேன். அது நம்மை நெருங்கும் போது, அது நடக்கும் என்று நினைக்கும் போது, ’ஆம் நமக்கு எல்லாமே நன்றாகவே நடந்தது அவ்வளவுதான்’ என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
ரிச்சி பெனோ, டோனி கிரெய்க் இதே காரணத்தினால் மரணமடைந்த போது, அது நம் முடிவையும் நினைவு படுத்துகிறது.
நான் இது பற்றி அதிகம் பேர்களிடம் கூறவில்லை, ஏனெனில் கதிரியக்கச் சிகிச்சை என்றால் என்னவென்று எனக்கு தெரியவில்லை, அது முடிந்தவுடன் நான் கொஞ்சம் தளர்ந்து விடுவேனா என்பதும் தெரியவில்லை. ஆனால் அவ்வளவு மோசமாக இல்லை. இரவில் களைப்பு ஏற்படுகிறது, சில நேரங்களில் சருமத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. மற்றபடி நான் நன்றாகவே உணர்கிறேன்” என்றார் இயன் சாப்பல்.
எந்த ஒரு விமர்சனக் கருத்தையும் எவ்வளவு பெரிய ஆளுமை வீரராக இருந்தாலும் நேரடியாகக் கூறும் இவரது தைரியமும், ஆட்டம் பற்றிய நுணுக்கமான பார்வைகளுக்காகவும் இயன் சாப்பல் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் பாராட்டப்படுபவர். நட்சத்திர வீரர்களின் சொம்புதூக்கி ரசிகர்களுக்கு இவரை பிடிக்காது என்பது தெரிந்ததே.
-பிடிஐ.