

ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 215 ரன்களையும் 2-வது இன்னிங்சில் 58 ரன்களையும் விளாசி இங்கிலாந்தை படுத்தி எடுத்த ஸ்டீவ் ஸ்மித் புதிய ஷாட் ஒன்றை பயன்படுத்தினார்.
ஆஃப் திசையில் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டு தனது இருகால்களுக்கும் இடையே பந்தை லெக் திசையில் அடிக்கும் கடினமான ஒரு ஷாட்டை ஸ்மித் பயன்படுத்தி வருகிறார்.
இந்த ஷாட் ‘ட்வீனர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது in-between என்பதை குறிக்க ட்வீனர் (tweener) என்று அழைக்கின்றனர்.
அதாவது இந்த ஷாட் கிரிக்கெட்டுக்குப் புதிது ஆனால் டென்னிஸ், கூடைப்பந்து ஆகியவற்றில் இந்த வார்த்தை ஏற்கெனவே பயன் படுத்தப்படுகிறது. ரோஜர் பெடரர் ஒரு சில பந்துகளை எதிரணி வீரருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு இரண்டு கால்களுக்கும் இடையே பந்தை தனது ராக்கெட்டினால் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் முழுதும் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு பந்தை தனது கால்களுக்கு இடையே அடிக்கிறார்.
கடந்த ஆண்டு மனுகா ஓவலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் மோர்னி மோர்கெல் பந்து ஒன்றை ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு இரு கால்களுக்குமிடையே பந்தை லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார்.
நேற்று லார்ட்ஸில் ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் பவுலிங்குக்கு எதிராக இந்த ட்வீனர் ஷாட்டை பயன்படுத்தினார் ஸ்மித்,
அதாவது லெக் திசையில் 2 பீல்டர்கள் மட்டுமே இருந்தனர். அப்போது பிராட் வீசிய பந்துக்கு ஸ்டம்புகளை விட்டு கிட்டத்தட்ட ஒரு மீட்டர் அளவுக்கு ஆஃப் திசையில் நகர்ந்த ஸ்மித் தனது கால்களுக்கு இடையே பந்தை பிளிக் செய்தார். இதன் மூலம் அரைசதம் கண்ட அவர் அடுத்த பந்தையும் அதே பாணியில் ஆடினார்.
இவ்வாறு இங்கிலாந்து பவுலர்களை அலட்சியமாக ஆடினார். 'தில் ஸ்கூப்' என்று தற்போது பிரபலமாகியுள்ள மண்டியிட்டு விக்கெட் கீப்பர் பின்னால் பந்தை தூக்கி விடும் ஷாட்டுக்கு உண்மையில் தில்ஷன் சொந்தக்காரர் கிடையாது, ஆனால் அவர் அதனை நிபுணத்துவத்துடன் அடிக்கடி ஆடியதால் ‘தில் ஸ்கூப்’ என்று பெயர் பெற்றது.
இந்த வகை ஸ்கூப் ஷாட்டுக்கு பெயர் பெற்றவர் ஜிம்பாப்வே முன்னாள் வீரர் டக்ளஸ் மரிலியர். ஒருநாள் போட்டி ஒன்றில் ஜிம்பாப்வே வீரர் டக்ளஸ் மரிலியர், ஜாகீர் கானை இதே பாணியில் ஆடி பயங்கர வெறுப்பேற்றினார், அதோடு டக்ளஸ் மரிலியர் 21 பந்துகளில் அரைசதமும் கண்டதோடு இந்தியாவின் 276 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் எடுத்து வெற்றி பெற்றது ஜிம்பாப்வே. குறிப்பாக அவர் அன்று அப்போதைய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை இவ்வாறு ஸ்கூப் ஷாட் ஆடியது மிகவும் அதிர்ச்சியளித்தது.
ஜாகீர் கானை மட்டுமல்ல, டக்ளஸ் மரிலியர், வேகப்பந்து வீச்சு மேதை கிளென் மெக்ராவையும் இதே பாணியில் ஒரு போட்டியில் ஆடி வெறுப்பேற்றினார். அந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் 303 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 301 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே.
அதாவது எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் ஒரு லேசான மாறுபாடே ஸ்மித் ஆடும் ட்வீனர். ஒரு மாதிரியான இயல்பற்ற கால்களின் நிலையில்தான் இந்த ஷாட்டை ஆட முடியும். தோனி கால்களுக்கு இடையே ஆடமாட்டார். ஸ்மித் கால்களுக்கு இடையே சீராக ஆடி வருகிறார். அதனை துல்லியமாக ஆடிவருகிறார்.
இந்த ட்வீனர் ஷாட் வரும் காலங்களில் பிரசித்தமடையலாம். ரிவர்ஸ் ஸ்வீப், தில்ஸ்கூப், தோனிகாப்டர் ஷாட், பீட்டர்சன் சுவிட்ச்-ஹிட் வகையறாவில் தற்போது ஸ்டீவ் ஸ்மித்தின் ட்வீனர்.