

பெ.மாரிமுத்து
இறுதிப் போட்டியில் தோல்விய டைந்த பிறகும் வெகுஜன பாராட்டு களை பெற்ற கேப்டன்களை அடையாளம் காண்பது அரிது. இந்த வகையில் அனைவரது இதயங்களிலும் தனித்தும் உயர்ந்தும் நிற்கிறார் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
இங்கிலாந்தில் நடைபெற்ற 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொட ரின் இறுதி ஆட்டம் இரு முறைடையில் (நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள், சூப்பர் ஓவர்) முடிவடைந்ததால் அதிக பவுண்ட ரிகள் விளாசியதன் அடிப்படையில் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப் பட்டது. இந்தவகையில் இங்கிலாந்து அணியைவிட 10 பவுண்டரிகள் குறை வாக அடித்திருந்ததால் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைகளில் தழுவும் வாய்ப்பை நியூஸிலாந்து அணி இழந்தது.
கடைசி அரை மணி நேரத்தில் கோடிக் கணக்கான ரசிகர்களை இருக்கையில் நிலைகொள்ளமாமல் செய்த இறுதி போட்டியானது 175 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த ஆட்டமாக அமைந்ததில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.இரு முறை ஆட்டம் டையில் முடி வடைந்தும் இறுதி நொடி வரை கடுமை யாக போராடிய நியூஸிலாந்து அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனது கிரிக்கெட்டின் துரதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
இரு முறை சமமான ரன்களை பெற்ற போதிலும் ‘விதியின்’ வசத்தால் (விதிமுறை) நியூஸிலாந்து அணி கோப்பையை முத்தமிட முடியாமல் போனதால் அந்த அணி வீரர்களின் மனது வெற்று உணர்வால் ததும்பியிருக்கக்கூடும். ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை பரபரப்புடனே வைத்திருந்த இங்கிலாந்து அணிக்கு இறுதி போட்டி நிறைவடைந்ததும் பெருவாரியான ஊடகங்கள் கேன் வில்லியம்சனை பாராட்டியது. இது நியூஸிலாந்தின் கேப்டன் மற்றும் அவரது சக அணி வீரர்களின் போராட்ட குணத்தை உணராத ஆத்மாவே இல்லை என்பதையே காட்டியது.
அடிக்கப்பட்ட பவுண்டரிகளின் எண்ணிக்கையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பிறகு, விதிகளை மாற்ற வேண்டிய அவசியம் குறித்து புகார் செய்வது எளிது. ஆனால் இங்குதான் அனை வரது இதயங்களையும் வென்றார் வில் லியம்சன். போட்டிக்கு பின்னர் நடை பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்த வில்லியம்சன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு புகழுரை வழங்கினாரே தவிர ஐசிசி-யின் விதிமுறைகள் குறித்து எந்த ஒரு இடத்திலும் புகார் கூறவில்லை.
வில்லியம்சன் கூறுகையில், “இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. ஆனால் அங்கு கீரிடம் சூடப்பட்ட வெற்றியாளர் இருந்தார், அவ்வளவுதான். உலகக்கோப்பையின் முடிவுகள் தலைக்குள் ஓடிக் கொண்டிருப்பது சற்று கடினம்தான். இதனைப் பகுத்தறிவுடன் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் தேவைப்படும்.
விதிகள் விதிகள்தான். நோக்கத்தை அடைந்த இங்கிலாந்திடம் இருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இறுதி ஆட்டம் மட்டும் அல்ல, இந்தத் தொடர் முழுவதுமே அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது வெற்றிக்கு தகுதியானவர்களே” என்றார்.
இறுதி ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றதில் மார்ட்டின் கப்தில் வீசிய ‘ஓவர் த்ரோ’ நியூஸிலாந்து அணியின் தலைவிதியை அப்படியே புரட்டிப் போட்டது. பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பந்து பட்டு பவுண்டரிக்கு பறக்க அவரோ நான், பந்தை இடைமறிக்கவில்லை என்று கதறாத குறையாக சைகையில் காட்ட வில்லியம்சன் சற்று புன்னகைக்கவே செய்தார்.
இந்த ஓவர் த்ரோவில் நடுவர் தர்மசேனா 6 ரன்களை எப்படி வழங்கினார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வருகிறது. ஏனெனில் அவர் வழங்கியது தவறான தீர்ப்பாகவே கருதப்படுகிறது. ஆட்டத்தின் பரபரப்பான சூழ்நிலையில் பீல்டர்
பந்தை த்ரோ செய்த போது பேட்ஸ் மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்யவில்லை. இதனால் பேட்ஸ்மேன் கள் ஓடி சேர்த்த ரன் எண்ணிக்கையை சிங்கிளாகவே கருதியிருக்க வேண்டும். ஆனால் களத்தில் நின்ற சக நடுவருடன் ஆலோசனை செய்த தர்மசேனா அதனை இரு ரன்களாக முடிவு செய்துவிட்டு ஓவர் த்ரோவுக்கு 4 ரன்கள் என ஒட்டுமொத்தமாக 6 ரன்கள் வழங்கிவிட்டார். ஒருவேளை 5 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தால் அடுத்த பந்தை ஆதில் ரஷித்தான் எதிர்கொண்டிருப்பார் பென் ஸ்டோக்ஸ் அல்ல. அந்த கணத்தில் வில்லியம்சன் சுதாரித்திருந்தால் ஒருவேளை ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும்.
ஆட்ட நாயகனாக தேர்வான பென் ஸ்டோக்ஸ் ஓவர் த்ரோ சம்பவத்தை குறிப்பிட்டு, “நியூஸிலாந்து வீரர்கள் நல்லவர்கள். அந்த ஓவர் த்ரோ சம்பவத்துக்காக என் வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருப்பேன்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக இறுதிக்கட்ட ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் விளாசிய பந்தை எல்லைக் கோட்டை மிதித்தபடி டிரெண்ட் போல்ட் கேட்ச் செய்து இங்கிலாந்து அணிக்கான வாய்ப்பை திறந்துவிட்டி ருந்தார். வழக்கமாக இதுபோன்ற கேட்ச்களை டிரெண்ட் போல்ட் சாதுர் யமாக கையாண்டுள்ளார். இறுதிப் போட்டியின் பதற்றமோ என்னவோ? இம்முறை கைகூடாமல் போனது.
இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது அதிர்ஷ்டத்தால் என்று எளிதாக கூறிவிடலாம். ஆனால் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் கூட்டணி அமைத்து 110 ரன்கள் சேர்த்தது, இறுதிக்கட்ட ஓவரில் பின்கள வரிசை பேட்டிங்கை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பந்தையும் கணக்கீடு செய்து ரன்கள் சேர்த்த பென் ஸ்டோக்ஸின் திறன், சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் ஜாஸ் பட்லர், மார்ட்டின் கப்திலை ரன் அவுட் செய்வதில் காட்டிய முனைப்பு ஆகியவற்றை புறந்தள்ளிவிட முடியாது.
கடந்த 2015-ம் ஆண்டு ஒருதரப்பாக அமைந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு மகுடம் சூடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை அந்த அணி கோப்பையை இழந்த விதம் இன்னும் பல ஆண்டுகளால் ஆயினும் ஆறாத வடுவாக மனதில் இருக்கும்.