

நேற்று லண்டனில் விளையாட்டு ரசிகர்களுக்கு கோலாகல நாளாக அமைந்தது, ஒருபுறம் இரு டென்னிஸ் மேதைகள் மோதிய விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிக், ரோஜர் பெடரர் ஆட்டம் பயங்கர விறுவிறுப்பாக அமைய, ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வரலாறு படைக்கும் தருணத்தில் நிகழ்ந்த கடைசி நேர நிகழ்வுகள் என்று நேற்று விளையாட்டுக்கு ஒரு உச்சபட்ச சிறப்பு தினமாக அமைந்தது.
இது வரை இல்லாத அளவுக்கு மிக அதிக நேர விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்று பெடரரை அயராத போட்டியில் வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து போட்டி அனைவரும் அறிந்ததே, 50ஓவர் ஆட்டத்திலும் போட்டி டை பிறகு சூப்பர் ஓவரிலும் டை, எந்த அணிக்கும் வெற்றி தோல்வியில்லாமல் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டி முடிந்து பவுண்டரிகள் கணக்கில் இங்கிலாந்து கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நேற்று உலகெங்கும் சம நேரத்தில் நடைபெற்ற விம்பிள்டன் மற்றும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் த்ரில் கணங்கள் எந்த போட்டியை விடுவது எதைப்பார்ப்பது என்ற ஒரு குதூகல சஞ்சலத்தை, இரட்டை நிலையை ஏற்படுத்தியது.
இதனிடையே விம்பிள்டன் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ஹலோ ஐசிசி, நீங்கள் எப்படி உங்கள் இறுதிக் கணங்களை சமாளிக்கிறீர்கள்” என்று ட்வீட் செய்து கேட்க அதற்கு ஐசிசி “இங்கு இப்போதைக்கு மிகவும் பரபரப்பு உச்சத்தில் இருக்கிறோம், மீண்டும் உங்களிடம் வருகிறோம்” என்று பதிலளித்திருந்தது.
இதற்கு மீண்டும் பதிலளித்த விம்பிள்டன் ட்விட்டர், “சரி, லண்டனில் விளையாட்டுக்கு இது போன்ற ஒரு உற்சாகமான நாளை பார்க்க முடியாது. மக்கள் நாளை என்ன செய்ய நாம் அறிவுறுத்தலாம்?” என்று ருசிகர ட்விட்டர்களை பரிமாறிக் கொண்டிருந்தனர், இந்த ட்விட்டர் ருசிகரம் வைரலானது.