Last Updated : 15 Jul, 2019 12:56 PM

 

Published : 15 Jul 2019 12:56 PM
Last Updated : 15 Jul 2019 12:56 PM

குழந்தைகளே கிரிக்கெட் விளையாடாதீர்கள்: நியூஸி. வீரர் ஜிம்மி நீஷம் உருக்கம்

 

லண்டன், பிடிஐ

குழந்தைகளே விளையாட்டை(கிரிக்கெட்) மட்டும் தேர்வு செய்யாதீர்கள் என்று உலகக் கோப்பைப் போட்டியி்ல் கோப்பையை இழந்த நியூஸிலாந்து அணி வீரர் ஜிம்மி நீஷம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

12-வது உலகக்கோப்பை மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல்முறையாக வென்றது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது.

 

 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் சேர்த்து சமனில் முடிந்தது. பவுண்டரி அதிகமாக அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்த நிலையில், நியூஸிலந்து 17 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தது.

 

வெற்றிக்கு அருகே வந்து கோப்பையை இழந்த நியூஸிலாந்து வீரர்களால் இந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பலர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர், ஒருவருக்கு ஒருவர் கட்டிஅணைத்து ஆறுதல் தெரிவித்தனர்.

 

அதிலும் கடைசி அரைமணிநேரத்தில் டிரன்ட் போல்ட் பிடித்த கேட்ச் சிக்ஸராக மாறியது, கப்தில் எறிந்த த்ரோ, ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு ஓவர் த்ரோ பவுண்டரி சென்றது  போன்ற சம்பவங்கள் ஆட்டத்தின் திருப்பமுனையாக அமைந்தன.

 

 

நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் மிகுந்த வேதனையுடன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அவர் பதிவில் " குழந்தைகளே கிரிக்கெட் விளையாட்டை விளையாடாதீர்கள். நன்றாக சமையல் செய்யுங்கள், அல்லது வேறு எந்த பணியையும் செய்யுங்கள் நன்றாக சாப்பிடுங்கள், குண்டாகும் வரை சாப்பிடுங்கள், மகிழ்ச்சியாக நாட்களை கழியுங்கள் 60 வயதில் மரணித்துவிடுங்கள். கிரிக்கெட் விளையாடாதீர்கள்.

 

இந்த முடிவு என்னை வேதனைப்படுத்திவிட்டது. இன்னும் ஒருநாள் மற்றும் இரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு இந்த போட்டியின் கடைசி அரைமணிநேரத்தை நினைத்துப்ப பார்க்கமாட்டேன். வாழ்த்துக்கள் இங்கிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் அணி. கோப்பைக்கு தகுதியானவர்கள்.  இன்று எங்களுக்கு ஆதரவு அளிக்க வந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதை எங்களால் முழுமையாக வழங்க முடியாதமைக்கு மன்னிப்பு கோருகிறோம் " எனத் தெரவித்தார்.

 

இந்த போட்டியில் ஜிம்மி நீஷம் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x