Published : 15 Jul 2019 08:15 AM
Last Updated : 15 Jul 2019 08:15 AM

சூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(?!)

போத்திராஜ், இரா.முத்துக்குமார்

12-வது ஐசிசி உலகக் கோப்பையை இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

உலகிற்கு கிரிக்கெட் விளையாட்டை கற்றுக்கொடுத்த இங்கிலாந்து 44 ஆண்டுகளுக்குப்பின் இந்த சாதனையை நிகழ்த்தியது.
உண்மையில் இதுவரை நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் மிகச்சிறந்த போட்டி, மறக்க முடியாத போட்டி, ரசிகர்களுக்கு திகட்ட, திகட்ட த்ரில் அளித்த போட்டி இதுவென்று சொல்லலாம்.

பிரதான போட்டியில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளும் 241  சேர்த்ததால் சமனில் முடிந்தது. அடுத்து முடிவு அறிய நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்ஸில் அதிகமான பவுண்டரி எந்த அணி அடித்தது என்ற அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அணி அதிகமாக அடித்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.  இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூஸிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.

ஆட்டநாயகன் விருது பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கப்பட்டது, தொடர்நாயகனாக கேன் வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், உண்மையில் அதிகமான பவுண்டரி அடித்த அணிக்கு வழங்குவது ஐசிசியின் விதியாக இருந்தாலும், இது அறத்தின் அடிப்படையில் சரியாகாது.

ஏனென்றால், நியூஸிலாந்து அணி 8 விக்கெட் மட்டும்தான் இழந்திருந்தது. ஆனால், இங்கிலாந்து அணியோ ஆட்டமிழந்திருந்தது இதை கருத்தில் கொள்ளவில்லை.

அதேபோல 49-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஓடிவந்தபோது, அவரின் பேட்டில் பட்டு ஓவர் த்ரோ பவுண்டரி ஆக மொத்தம் 6 ரன்கள் வழங்கப்பட்டது. இது கிரிக்கெட்டின் விதிதான் என்றாலும், போட்டியின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதாக ஓவர் த்ரோ அமைந்தது துரதிர்ஷ்டமே

இதில் கேள்வி எனில் ஸ்டெம்புக்கு வந்த பந்தை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ பேட்ஸ்ஸ்மேன் தடுக்கும்போது அது அவுட்டை தடுப்பதற்கு சமம். அந்தவகை பந்துக்கு குறுக்கே ஸ்டோக்ஸ் வந்ததால் அவுட் ஆகாதா?. இந்த சர்ச்சை பல நாட்களுக்கு நிச்சயம் பேசப்படும். ஆதலால், உலகக் கோப்பையில் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணி தோற்கவில்லை. இங்கிலாந்து அணி மட்டுமே பவுண்டரிகளால் சாம்பியனானது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் சேர்த்து சமனில் முடிந்தது. பவுண்டரி அதிகமாக அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றது.

சூப்பர் ஓவர்:

முதன் முதலாக உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாறு காணாத ‘டை’ ஆகி, சூப்பர் ஓவருக்குச் சென்றது, இதில் முதலில் இங்கிலாந்து பேட்டிங், பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறக்கப்பட்டனர்.

ஒரே சூப்பர் ஓவரை வீசியவர் ட்ரெண்ட் போல்ட், முதல் பந்தை ஆஃப் திசையில் தூக்கி அடிக்க ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் சிங்கிள் எடுத்தார், அடுத்த பந்து சற்றே உள்ளே வர கிட்டத்தட்ட ஸ்வீப் பாணியில் பென் ஸ்டோக்ஸ் சக்தி வாய்ந்த ஷாட்டை ஆட மிட்விக்கெட்டில் பவுண்டரிக்குப் பறந்தது.

4வது பந்தில் 1 ரன், 5வது பந்தில் 2 ரன்கள், கடைசி பந்தை போல்ட் புல்டாஸாக வீச பட்லர் பவுண்டரி விளாசினார், சூப்பர் ஓவரில் இங்கிலாந்து 15 ரன்கள். 16 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், மார்டின் கப்தில் இறங்கினார்கள். இங்கிலாந்து தரப்பில் அவ்வளவு அனுபவ பவுலர்கள் இருந்தும் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் பந்தைக் கொடுத்தார் மோர்கன். அவர் டென்ஷனில் முதல் பந்தை வைடாக வீச 2வது பந்தை நீஷம் லாங் ஆஃபில் அடித்து படுவேகமாக 2 ரன்கள் சேர்த்தார். அடுத்த யார்க்கர் லெந்த் பந்தை முன் காலை விலக்கிக் கொண்டு நீஷம் ஒரே தூக்கு தூக்கினார் பந்து சிக்சர். 4 பந்துகளில் 7 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஜேம்ஸ் நீஷம் அடித்த பந்தை மிட்விக்கெட்டில் ஜேசன் ராய் சரியாக சேகரிக்காமல் 2 ரன்களைக் கொடுத்தார்.

3 பந்துகள் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவை. இந்த முறையும் 2 ரன்களை படுவேகமாக ஓடி எடுத்தனர் நீஷமும், கப்திலும். 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்று பரபரப்பானது. நீஷம் இன்சைடு எட்ஜில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்து 2 ரன் எடுத்தால் வெற்றி கப்தில் ஸ்ட்ரைக்குக்கு வந்தார், அருமையான பந்து, அதனை கப்தில் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு 2 ரன்களுக்காக வேகமாக ஓடி வந்தார்.



ஆனால் கீப்பர் முனைக்கு வந்த த்ரோ சரியாக அமைய கப்தில் ரீச் செய்ய முடியவில்லை. சூப்பர் ஓவரிலும் டை ஆனது, தோனியை சூப்பர் த்ரோவில் ரன் அவுட் செய்து இந்திய அணியின் இறுதி வாய்ப்பை அடைத்த கப்தில் கடைசியில் தானே ரன் அவுட் ஆனது ஒரு நகைமுரண்.

இரு அணிகளும் 15 ரன்கள் சூப்பர் ஓவரிலும் டை ஆனது போட்டி, ஆனால் சூப்பர் ஓவர் டை ஆனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி வென்றதாக அறிவிக்கப்பட வேண்டும், அந்த வகையில் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து, ஆனால் நியூஸிலாந்து தோற்கவில்லை.

கடைசி ஓவரில் அந்த ஓவர் த்ரோ, அதன் விதிமுறைகள் நியூஸிலாந்து விதியைத் தீர்மானித்தது. சீட் நுனிக்கு வரவழைத்த த்ரில் போட்டியை இரு அணிகளும் வழங்கி மிகச்சிறந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நடத்திக் காட்டியது.

242  ரன்கள் இலக்கு

242 ரன்கள் சேர்த்தால் வெற்றியுடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிறிதும் சளைக்காமல் போல்ட், ஹென்றி பந்துவீசினார். போல்ட் வீசிய முதல்ஓவர் முதல் பந்தில் ஜேஸன் ராய் கால்காப்பில் வாங்கினார். நடுவர் அவுட் தரவில்லை என்றபோதிலும் ரிவியூ சென்றனர் நியூஸிலாந்து அணியினர் அதில் ராய் தப்பித்தார்.

தொடக்கத்திலேயே ஜேஸன் ராயை மிரட்டிவிட்டதால், அதன்பின் ராய் ஆட்டத்தில் அவரின் வழக்கமான அதிரடியைப் பார்க்க முடியவில்லை. போல்ட், ஹென்றியின் துல்லியமான லைன் லென்த் பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் ராய், பேர்ஸ்டோ ரன் சேர்க்க தடுமாறினார்கள்.

ஹென்றி வீசிய 6-வது ஓவரில் ஆப்ஃ-சைடில் விலகிச் சென்ற பந்தை அடிக்க முற்பட்டு ஜேஸன் ராய் 17 ரன்னில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நியூஸிலாந்துக்கு மிகப்பெரிய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சி ஏற்பட்டது. 28 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து .

அடுத்து வந்த ரூட், பேர்ஸ்டோவுடன் இணைந்தார். நிதானமாக களத்தில் நின்று விளையாடக் கூடிய ரூட் நேற்று ரன் சேர்க்க முடியாமல் பந்தை தடவினார். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு மிக நேர்த்தியாக, கட்டுக்கோப்பாக இருந்தது.

கோலின் டி கிராண்ட்ஹோம், பெர்குஷனும் சேர்ந்து ரூட்டுக்கும், பேர்ஸ்டோடுவுக்கும் தண்ணிகாட்டினார்கள். என்னதான் அடித்தாலும் ஸ்கோர் ஏறவில்லை. டாட் பந்துகள் அதிகரிக்க, அதிகரிக்க ரூட்டுக்கு அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது.
 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்திருந்தது. கிரான்ட்ஹோம் வீசிய 11, 13 ஓவர்கள் , ஹென்றி வீசிய 12-வது ஓவர் மெய்டனாக வீசப்பட்டதது. தொடர்ச்சியாக 3 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டதால், இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்தது.



உலகக்கோப்பையில் அதிக ரன்சேர்த்தவர்கள் வரிசையில் இருக்கும் ரூட் நேற்று ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார். கிராண்ட்ஹோம் வீசிய 17-வது ஓவரில் 2-வது பந்தை இறங்கி அடிக்க முற்பட்ட கிராண்ட்ஹோம், வலதுபுறமாக விலகிச்சென்ற பந்தை அடிக்க முற்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரூட் 7 ரன்னில் வெளியேறினார். 30 பந்துகளில் ரூட் 7 ரன் மட்டுமே சேர்த்தார்.
அடுத்துவந்த மோர்கன், பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். பேர்ஸ்டோ மட்டும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ஆறுதல் அளித்துவந்தார். ஆனால், பெர்குஷன் வீசிய 20-வது ஓவரில் பேர்ஸ்டோ 36 ரன்களில் இன்சைட் எட்ஜ் முறையில் போல்டாகி வெளியேறினார்.

11-வது ஓவர் முதல் 20-வது ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
மோர்கனுடன், ஸ்டோக்ஸ் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்தனர். அடித்து ஆட முற்படாமல் விக்கெட்டை நிலைப்படுத்தவே அதிக முக்கியத்துவம் அளித்தார்கள்.

நீஷம் வீசிய 24-வது ஓவரில் மோர்கன் லெக் சைடில் விலகி ஆஃப் சைடில் அடிக்க, பவுண்டரியில் இருந்து ஓடி வந்து பெர்குஷன் அற்புதமான கேட்சை பிடித்தார். யாரும் இதுபோன்ற கேட்சை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். மிக அருமையான கேட்சை பெர்குஷன் பதிவு செய்தார். மோர்கன் 9 ரன்னில் வெளியேறினார். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தோல்வியின் பிடிக்குள் அகப்படத் தொடங்கியது.

அடுத்து வந்த பட்லர், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் நிதானத்தை கடைபிடித்தார்கள். ஆனால், பட்லர் உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியைத் தவிர்த்த பெரும்பாலான போட்டிகளில் மோசமான ஆட்டத்தை கொடுத்தாலும் இந்த போட்டியில் நல்ல இன்னிங்ஸை அளித்தார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது கடினம் என்பதை உணர்ந்த இருவரும் ஒரு ரன், இரு ரன்களாக எடுத்து அணியை மெல்ல நகர்த்தினர். இருவரையும் பிரிக்க வில்லியம்ஸன் பல பந்துவீச்சாளர்களை மாற்றினார். ஆனால், இருவரையும் கழற்ற முடியாமல் திணறினர்.

40 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது. இருவரையும்  பிரிக்கும் முயற்சியில் சிக்கனமான பந்துவீச்சாளர்கள் கிராண்ட்ஹோம், ஹென்றி இருவரின் ஓவரும் முடிந்தது.

நிதானமாக ஆடிய பட்லர் 53 பந்துகளில் அரைசதம் அடித்தார். இக்கட்டான சூழலில் இருந்து அணியைக் கொண்டுவந்து பட்லர் அரைசதம் அடித்தது இங்கிலாந்து அணிக்கு பெருமகிழ்ச்சி அளித்தது.

பெர்குஷன் வீசிய 45-வது ஓவரில் பவுண்டரி அடித்த பட்லர் 3-வது பந்தில்  பவுண்டரி அடிக்கும் முயற்சியில் கவர் திசையி்ல தூக்கி அடித்தார். ஆனால், அங்கு ஓடிவந்த சவுதி கேட்ச் பிடிக்க பட்லர் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லர் சிறிது அவசரப்படாமல் நிதானமாக ஆடி இருத்தல் அவசியம், 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 110 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இருவரின் ஆட்டத்தைப் பார்த்தபோது, கடந்த 1992-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆலன் லாம்ப்-ஃபேர் பிரதர் நினைவுக்குவந்தது. ஆனால், அப்போது அவர்கள் இருவரையும் வாசிம் அக்ரம் பிரித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனை என்பது நினைவிருக்கலாம். அடுத்துவந்த வோக்ஸ், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். 81 பந்துகளில் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். 24 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

பெர்குஷன் வீசிய 47-வது ஓவரில் 150 கி.மீ வேகத்தில் வந்த பந்தை வோக்ஸ் தூக்கி அடிக்க அது விக்கெட்ட கீப்பர் லதாமிடம் கேட்சாக அமைந்தது. 2 ரன்னில் வோக்ஸ் ஆட்டமிழந்தார். இக்கட்டான தருணத்தில் பெர்குஷன் இரு முக்கிய விக்கெட்டுகளான பட்லர், வோக்ஸ் விக்கெட்டை சாய்த்து ஆட்டத்தை நெருக்கடியில் தள்ளினார்.அடுத்து வந்த பிளங்கெட், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். களத்துக்கு வந்தவுடனே பிளங்கெட் பவுண்டரி அடித்தார். கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் இங்கிலாந்து வெற்றிக்கு தேவைப்பட்டது. ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரி உள்ளிட்ட 10 ரன்கள் சேர்க்கப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. நீஷம் பந்துவீசினார். 3-வது பந்தில் பிளங்கெட் தூக்கி அடிக்க அது போல்ட் கையில் கேட்ச் ஆனது. அடுத்து ஆர்ச்சர் களமிறங்கினார். 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் சிக்ஸர் அடிக்க அதை போல்ட் கேட்ச் பிடித்து பின்னால் திரும்பிப் பார்க்கையில் எல்லைக் கோட்டை மிதித்துவிட்டதால் அது சிக்ஸரானது. இந்த கேட்சை போல்ட் பிடித்திருந்தால், ஆட்டம் முடிந்திருக்கும். சிக்ஸர் சென்றதுதான் ஆட்டத்தின் முதல் திருப்புமுனை. 5-வது பந்தில் ஒரு ரன்எடுத்தார். கடைசி ஓவரில் ஸ்லோ பந்தில் ஆர்ச்சர் போல்டாகி வெளியேறினார்.

கடைசி ஓவர் 15 ரன்கள் இங்கிலாந்து வெற்றிக்கு தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் பந்துவீச களத்தில் ஸ்டோக்ஸ், ரஷித் இருந்தனர். ஸ்டோக்ஸ் தான் சந்தித்த 2 பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தில் ஸ்டோக்ஸ் மிட்விக்கெட்டில் காலை மடக்கிக்கொண்டு அபாரமான சிக்ஸரை அடித்தார். 4-வது பந்தில் ஸ்டோக்ஸ்  2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தது.

கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. போல்ட் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, ரஷித் ரன் அவுட்டில் வெளியேறினார். கடைசிப்பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. போல்ட் யார்கராக வீச, ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடிவிட்டு, 2-வது ரன் எடுக்கும்போது, மார்க் உட் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் சேர்த்தார்.

இதனால், இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. நியூஸிலாந்து தரப்பில்  பெர்குஷன், நீஷம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x