

இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், சுநீல் காவஸ்கரின் தாய் மாமாவுமான மாதவ் மந்திரி (92) வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் வெள்ளிக்கிழமை காலையில் காலமானார். இவர் திருமணமாகாதவர்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மந்திரி, 1951 முதல் 1955 வரையிலான காலங்களில் இந்தியாவில் ஒரு போட்டி, இங்கிலாந்தில் 2 போட்டி, டாக்காவில் ஒரு போட்டி என மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 63 ரன்கள் சேர்த்ததோடு, 8 கேட்சுகளையும், ஒரு ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார்.
ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்த மந்திரி, பாலி உம்ரிகர், பப்பு நட்கர்னி போன்ற முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசகராக இருந்தவர். முதல் தர கிரிக்கெட் போட்டியில் கால் நூற்றாண்டு காலம் விளையாடிய இவர், 2,787 ரன்களைக் குவித்துள்ளார்.
அதிகபட்சமாக ஓர் இன்னிங்ஸில் 200 ரன்கள் குவித்துள்ளார். இது 1948-49-ல் நடைபெற்ற ரஞ்சி அரையிறுதிப் போட்டியில் மந்திரி மும்பை அணிக்காக விளையாடியபோது, மகாராஷ்டிரத்திற்கு எதிராக அடிக்கப்பட்டதாகும். அவர் தலைமையில் மும்பை அணி மூன்று முறை ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சாம்பியனாகியுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபிறகு 1980-களில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் மந்திரி. அவர்தான் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த கடைசி கிரிக்கெட் வீரர். இதுதவிர 1964 முதல் 1968 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த மந்திரி, 1990-ல் இங்கிலாந்து சென்ற அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கு மேலாளராக இருந்தார்.
இதேபோல் சரஸ்வத் வங்கி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 1990 முதல் 1992 வரையிலான காலங்களில் பிசிசிஐயின் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிசிசிஐ இரங்கல்
மாதவ் காலமானதற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), “மாதவ் மந்திரியின் மரணம் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்” என குறிப்பிட்டுள்ளது.